பின்பு திருக்கோயிலினின்றும் புறப்பட்ட பொழுது திருநீலகண்டப் பெரும்பாணர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கி நின்று, “சுவாமி! அடியேனுடைய ஜன்மஸ்தலமாகிய திருவெருக்கத்தம்புலியூர் முதலாக நிவாவென்னும் நதிக்கரையில் இருக்கின்ற தலங்களை வணங்குதற்கு எழுந்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
ஆளுடையபிள்ளையார் அதற்கிசைந்தருளி, தந்தையார் முதலிய சமஸ்தரோடும், திருநீலகண்டப்பெரும்பாணர் திருவவதாரஞ்செய்த திருவெருக்கத்தம்புலியூருக்கும் திருமுதுகுன்றுக்கும் போய், சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, பெண்ணாகடத்தை அடைந்தார். அங்கே திருத்தூங்கானை மாடம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியைத் தரிசனஞ் செய்துகொண்டு, திருநெல்வாயிலரத்துறைக்குப் போக விரும்பி, தந்தையாருடைய தோள்மேலிருத்தலை ஒழிந்து, அவர் மனம் வருந்தும்படி பிராமணர் முதலியோர் சூழ்ந்து செல்ல, திருவடித்தாமரை நோவ, பையப்பைய நடந்து, மாறன்பாடி என்னும் பதிவந்தவுடனே, வழி சென்ற வருத்தத்தினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, அப்பதியிற் சென்றார். அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயிற்று.
அன்றிரவு பிள்ளையார் அடியார்களோடும் அந்தப் பதியிலேயே தங்கினார். திருவரத்துறையில் வீற்றிருக்கின்ற கடவுள் தம்முடைய திருக்குமாரராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய வழிவருத்தத்தைத் திருவுளத்தடைத்து, அவர் ஏறுதற்கு முத்துச்சிவிகையும், அவருக்கு நிழற்றுதற்கு முத்துக் குடையும், ஊதுதற்கு முத்துச் சின்னங்களுங் கொடுத்தருளத் திருவுளங்கொண்டு, அந்த ஸ்தலத்திலிருக்கின்ற பிராமணர்களெல்லாருக்கும் தனித்தனியே சொப்பனத்திலே தோன்றி, “ஞானசம்பந்தன் நம்மிடத்துக்கு வருகின்றான், நீங்கள் முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச் சின்னங்களும் நம்மிடத்தில் எடுத்து அவனிடத்திற்குக் கொண்டுபோய்க் கொடுங்கள்” என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். உடனே பிராமணர்கள் விழித்தெழுந்து, மகிழ்ந்து, அற்புதமெய்திய சிந்தையோடும் ஆலயத்திலே வந்து கூடி, திருப்பள்ளியெழுச்சிக் காலம் வர, திருக்காப்பை நீக்கி, முத்துச்சிவிகையயும் முத்துக்குடையையும் முத்துச் சின்னங்களையும் கண்டு, ஆனந்தங்கொண்டு, துந்துபி முதலிய வாத்தியங்கள் ஒலிப்ப, சிவனடியார்களோடு, அந்தச் சிவிகை முதலாயினவற்றைத் தாங்கிக் கொண்டு, ஆளுடைய பிள்ளையாரிடத்திற்குப் போனார்கள். அதற்குமுன் பரமசிவன் ஆளுடைய பிள்ளையாருக்கும் சொப்பனத்திலே தோன்றி, “நாம் உனக்கு முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச்சின்னங்களும் அனுப்புகின்றோம். நீ அவைகளை ஏற்றுக்கொள்” என்று திருவாய்மலர்ந்தருளினார்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.