ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரஸ் காசா வாயிலுக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டு, மேலும் உதவிகள் செல்வதை அனுமதிக்கும் வகையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததோடு இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பயங்கரத்தை உலகம் பார்த்திருந்தது போதும் என்றும் வலியுறுத்தினார்.
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த நீடிப்பதோடு, காசா நகருக்கு வெளியே உதவி விநியோகம் இடம்பெறும் இடத்தில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 19 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் செல் குண்டுகளை வீசியதாகவும் காசா நிர்வாகம் கூறியது. ‘குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவி லொறிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ டாங்கி சூடு நடத்தியதோடு செல் குண்டுகளை வீசியது’ என்று காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இந்த மாத ஆரம்பத்திலும் இதே இடத்தில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காசாவில் உதவி வாகனங்களுடன் தொடர்புட்ட சம்பவங்களில் இஸ்ரேலிய படையினரால் இதுவரை குறைந்தது 560 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 1,523 பேர் காயமடைந்திருப்பதாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
‘இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் குற்றமாக பயன்படுத்துகிறது’ என்றும் அந்த கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
காசாவை முழுமையாக முற்றுகையில் வைத்திருக்கும் இஸ்ரேல் அங்கு உதவிகள் செல்வதை கட்டுப்படுத்தி வரும் நிலையில் உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதோடு அந்தப் பகுதி பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐ.நா மற்றும் உதவி அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
‘சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் என காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் இடைவிடாத பயங்கரத்தில் சிக்கியுள்ளனர்’ என்று உதவிகள் செல்வதற்கான பிரதான நுழைவாயிலாக இருக்கும் காசாவுடனான ரபா எல்லைக் கடவையின் எகிப்து பக்கத்தில் இருந்து குட்டரஸ் தெரிவித்தார்.
இந்த ரபா பகுதியில் காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு தமது துருப்புகளை அனுப்பப்போவதாக இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
‘இது போதுமானது என்ற உலகின் அதிகப் பெரும்பான்மையான மக்களின் குரலையே நான் பிரதிபலிக்கிறேன்’ என்று கூறிய குட்டரஸ், ‘அங்கு சமூகங்கள் அழிக்கப்பட்டுள்ளன, வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த குடும்பங்கள் மற்றும் தலைமுறைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார்.
ஒக்டோபர் 7 தாக்குதல் அல்லது பலஸ்தீனர்கள் மீதான கூட்டுத் தண்டனையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய அவர் காசா முழுவதும் மனிதாபிமான பொருட்கள் செல்வதை முழுமையாக மற்றும் தடங்கலற்ற வகையில் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தினார். ‘வாயிலின் ஒரு பக்கத்தில் நிவாரண லொறிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அதேநேரம் மறுபக்கத்தில் பட்டினி நீடிப்பது தார்மீக சீற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
அல் ஷிபா மருத்துவமனை வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றைய (24) தினத்திலும் தொடர்ந்தன. அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் 59 வயது முகமது அங்குள்ள நிலைமையை ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு விபரித்துள்ளார். வீதிகளில் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் கட்டடங்கள் தீக்கிரையாகி வீதிகள் டாங்கிகளால் முடக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘காசா நரக நெருப்பை விடவும் மோசமாக மாறியிருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.
மறுபுறம் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய தரைப்படை மற்றும் விமானப் படையின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் ரபா மற்றும் டெயிர் அல் பலாவில் இடம்பெற்ற குண்டு வீச்சுகளில் குறைந்தது 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் கொல்லப்பட்டு மேலும் 106 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,226 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றபோதும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடித்து வருகிறது.
பணயக்கைதிகள் சிலரை விடுவித்து போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் தொடர்ந்தும் முயற்சி இடம்பெற்று வருகிறது. எனினும் போர் தரப்புகள் இடையே தொடர்ந்தும் ஆழமான இடைவெளி இருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் அறிந்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘(ஹமாஸ்) அமைப்பு வெளிக்காட்டும் நெகிழ்வுப் போக்கை எதிரிகள் பலவீனம் என்று புரிந்து கொண்டிருப்பதால் ஹமாஸ் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நிலைகளில் ஆழமான வேறுபாடு ஒன்று உள்ளது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.