மாலைதீவுகள், இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். நீண்ட காலமாக உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு புவியியல் ரீதியிலான சொத்தாக இது இருந்து வருகிறது. மாலைதீவின் மூலோபாய இருப்பிடம், அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் மாலைதீவுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு, புவிசார் அரசியலில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அண்மையில் பதவிக்கு வந்த மாலைதீவு நாட்டின் ஜனாதிபதி மொஹமட் முயிஸ்ஸு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டையும், சீன ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டவராவார்.
2013ம் ஆண்டு ஆட்சியிலிருந்த அப்துல்லாஹ் யமீனும் சீன சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 2013ம் ஆண்டு சீனா இலங்கையிலும், மாலைதீவிலும் தனது முதலீட்டை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் போலவே, மாலைதீவில் சீனாவின் முதலீடு அதன் இலட்சிய திட்டமான ஒரு பட்டி ஒரு பாதை முன்முயற்சி திட்டத்தில் (பிஆர்ஐ) இருந்து ஆரம்பமாகிறது.
மாலைதீவு, முக்கிய கடல் வர்த்தக வழித்தடங்களில் அதன் மூலோபாய இருப்பிடத்தைக் கொண்டிருக்கிறது. சீனாவின் கடல்சார் அபிலாஷைகளுக்கு இலங்கை எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதோ, அதே போன்ற முக்கியத்துவம் பெற்ற இடமாக மாலைதீவு திகழ்கிறது.
சீனா மாலைதீவில் பல முக்கிய முதலீடுகளை செய்துள்ளது. இதில் முக்கியமானதாக கருதப்படுவது சீனா-மாலைதீவு நட்புறவுப் பாலமாகும். இந்த சீன மாலைதீவு நட்புறவுப்பாலம் தலைநகரான மாலேயை அருகிலுள்ள ஹுல்ஹுமாலே தீவுடன் இணைக்கிறது.
சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை விரிவுபடுத்தவும், அதன் புவிசார் அரசியல் மூலோபாயத்தை நிலை நிறுத்தவும் உதவுகிறது.
இவ்வாறு, மாலைதீவில் விரிவடைந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை பிராந்திய சக்திகள் தமக்கேற்படும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றன. குறிப்பாக சீன ஆதிக்கம் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா கவலை அடைகிறது.
மாலைதீவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்கு மண்டலத்திற்கு பாதிப்புகள் வருவதாக இந்தியா கருதுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மாலைதீவு என்பது அதன் புவியியல் ரீதியிலான நெருக்கத்தைக் கொண்ட, வரலாற்று உறவுகளையும் கொண்ட முக்கியத்துவமிக்க நாடாகும். இந்து சமுத்திரம், இந்தியாவின் பாதுகாப்புக்கும், பொருளாதார நலன்களுக்கும் இன்றியமையாததாக இருப்பதால், இந்தியா மாலைதீவை அதன் ‘முதலாவது அண்டை நாடு’ என்ற கொள்கையின் மூலம் அரவணைக்கப் பார்க்கிறது.
2013ம் ஆண்டு மாலைதீவில் ஜனாதிபதியாக ஆட்சி பீடமேறிய அப்துல்லாஹ் யமீன், சீனாவோடு மிக நெருங்கிய உறவை வைத்திருந்தார். யமீனின் ஆட்சிக்காலத்தில், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற போர்வையில் பல கோடி அமெரிக்க டொலர்களை மாலைதீவில் சீனா கொண்டு வந்து கொட்டியது.
அப்துல்லாஹ் யமீன், இலங்கையின் மஹிந்த ராஜபக்ஷவைப் போலவே சீனாவின் செல்லப்பிள்ளைாகவும், சீனாவின் பினாமியாகவும் செயற்பட்டார். மாலைதீவு மெல்ல மெல்ல சீனாவின் பிடிக்குள் சிக்குவதற்கு யமீன் காரணமான இருந்ததாக எதிர்க்கட்சிகள் இன்றும் குற்றம் சாட்டி வருகின்றன.
மாலைதீவு நீண்ட காலமாக தெற்காசியாவில் இந்திய செல்வாக்கு மண்டலத்தின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னரான மாலைதீவின் அரசியல், பொருளாதார விவகாரங்களில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது.
இருந்தபோதிலும், சமகாலத்தில் இந்திய-மாலைதீவு உறவு அரசியல் பின்புலங்களாலும், சீன நலன்சார்ந்த அரசியல் தலையீட்டாலும் சீர்குலைந்து போயுள்ளது. மாலைதீவிலுள்ள இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு சீன சார்பு ஜனாதிபதி முயிஸ்ஸு கட்டளை பிறப்பித்ததன் பின்னர் இரண்டு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை உருவாகியிருக்கிறது.
மாலைதீவின் சுகாதார மற்றும் சுற்றுலாத்துறையில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனாதிபதி முயிஸ்ஸுவின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்தியர்களிடையே மாலைதீவை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சீனாவிடமிருந்து கடன் பெற்ற ஏனைய நாடுகளின் நிலைமையைப் போலவே, சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் அதன் உலகளாவிய கடல்சார் அபிலாஷைகளையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.
2012 க்கு முன்பு, சீனாவிற்கு மாலைதீவின் தலைநகரான மாலேயில் தூதரகம் கூட இருக்கவில்லை. அப்துல்லாஹ் யமீனின் ஆட்சிக்குப் பிறகே சீனாவின் ஆதிக்கம் மாலைத்தீவில் அதிகரித்தது. யமீனின் காலத்தில் சீன சுற்றுலாப் பயணிகளாலும், சீன வெளிநாட்டு முதலீட்டுகளாலும் அந்நாடு நிரம்பி வழிந்தது. இந்த சீன முதலீடுகள் மாலைதீவை ஓர் ஊழல் சாம்ராஜ்யமாக மாற்றுவதற்கும் துணை புரிந்தது.
சீன சார்பு அப்துல்லாஹ் யமீனின் அப்போதைய அரசாங்கம் ஊழல்களில் ஊறிப்போனதாக எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சீன முதலீடுகளை வைத்து இலங்கையில் அதிகார வர்க்கம் இழைத்த ஊழல்களைப் போலவே, அப்துல்லாஹ் யமீனின் அரசாங்கமும் ஊழல்களில் ஊறிப்போனது.
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை கைக்குள் வைத்து தனது அரசியல் காய்களை நகர்த்துவதில் சீனாவுக்கு தனியான வல்லமை இருக்கிறது. அதனை விபரித்து சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை. தனது முதலீடுகளை வைத்து கமிஷன் வாங்குபவர்களைப் பற்றியோ, ஊழல்களைப் பற்றி சீனா அப்படியொன்றும் அலட்டிக் கொண்டதாக வரலாறு இல்லை.
சீன சார்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் ஊழல்களுக்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். யமீனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி சோலிஹின் அரசாங்கம் ஊழல் தொடர்பாக விசாரணை நடாத்தி யமீனை சிறையில் அடைத்தது. தனது பினாமியான யமீனை பாதுகாப்பதற்கு சீனா எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.
கடந்த 2023 ஜனாதிபதித் தேர்தலில் யமீனினதும், சீனாவினதும் ஆதரவாளரான முஹம்மத் முயிஸ்ஸு வெற்றி பெற்றார். இதன் பின்னணியில் சீனாவின் “எஜென்டா” இருந்ததாக எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. முயிஸ்ஸு தனது தேர்தல் பிரசாரங்களின் அடிநாதமாக இந்திய வெறுப்பையும் சீன ஆதரவையுமே முன் வைத்தார்.
முயிஸ்ஸு வெற்றியடைந்ததன் பின்னர் முதற்கட்டமாக, ஊழல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல்லாஹ் யமீனை சிறைத் தண்டனையிலிருந்து மீட்டு வீட்டுக்காவலில் வைத்துள்ளார்.
முயிஸ்ஸுவின் வெற்றியைத் தொடர்ந்து மாலைதீவுடனான இந்தியாவின் உறவு முறுகல்கள் நிறைந்ததாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் மாறியுள்ளது.
மாலைதீவில் 2018 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், அப்துல்லாஹ் யமீனின் சீன சார்பு நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டதோடு, பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக திகழும் இந்தியாவையும் அனுசரித்து போக வேண்டும் என்ற சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருந்தார்.
என்ற போதிலும், முயிஸ்ஸுவின் தலைமையில் இயங்கும் தற்போதைய மாலைத்தீவு அரசாங்கம், இந்திய எதிர்ப்புணர்வை பரப்பி சீனாவுடனான உறவுகளை ஆழப்படுத்துவதன் காரணமாக பிராந்தியத்தில் கொந்தளிப்பான நிலை உருவாகியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு மாலைதீவு நாடு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிஸ்ஸு பதவி ஏற்றதிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் சிக்கல் நிறைந்ததாக மாறி வருவதாக செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி முயிஸ்ஸுவின் சீன சார்பு நிலைப்பாடும், தவறான நிர்வாகமும், அந்நாட்டின் மீது கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மாலைதீவின் நிதிக் கொள்கைகளை விரைவில் மறுபரிசீலனை செய்யாவிட்டால், மாலைதீவு பெரும் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இலங்கையைப் போலவே கடந்த காலங்களில் மாலைத்தீவு சீனாவுக்கு அதிகம் கடன் பட்டிருக்கிறது. IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் சீனாவிடமிருந்து தொடர்ந்து கடன் பெற்று வரும் மாலைதீவு தனது நிதிக் கொள்கைகளை விரைவில் மறுபரிசீலனை செய்யாவிட்டால் மாலைத்தீவின் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு செல்லும் எனவும் கணித்துள்ளது.
ஜனாதிபதி முயிஸ்ஸு இந்திய- விரோத பிரசாரத்தின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றி, இந்தியாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி சோலிஹின் அரசாங்கத்தால் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி முயிஸ்ஸு மறுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
ஜனாதிபதி முயிஸ்ஸு நாட்டின் கொள்கைகளை சீனாவை நோக்கி திருப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மாலைதீவின் எதிர்க்கட்சிகள், முயிஸ்ஸு இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்து, மாலைதீவை சீனாவுடன் இணைத்ததாகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிராந்தியத்தில் ஒரு முக்கிய பாதுகாப்பு வழங்குனராக இந்தியாவின் வரலாற்றுப் பங்கைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி முயிஸ்ஸுவின் அரசாங்கம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
-ஆதவன்