– நீர் மூலங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய பாராளுமன்ற விசேட குழு
சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் அரசாங்கத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் தொடர்பில் எவ்வித அடிப்படையும் இன்றியும், உறுதிப்படுத்த முடியாத விடயங்களின் அடிப்படையிலும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக அவர்களது கடமைசார்ந்த தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளை சவாலுக்குட்படுத்தி இந்த உயர் சபையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சிக்கும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதை பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (5) சபையில் அறிவித்தார்.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அடிப்படையின்றி வெளியிடப்படும் அவ்வாறான அறிக்கைகளினால் மேற்படி அரச அதிகாரிகளின் நற்பெயருக்கும் தொழில் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, அவ்வாறான கூற்றுக்கள் தொடர்பில் பதிலளிக்கும் வாய்ப்பு அந்த அதிகாரிகளுக்கு இல்லாததனால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் அதைரியமூட்டப்படுவதையும் அவதானிப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற அறிக்கைகள் குறித்து அந்த அதிகாரிகள் தங்களது ஆழ்ந்த கரிசனையைத் தெரிவித்து எனக்கு எழுத்துமூலமாக விடயங்களை முன்வைத்திருப்பது குறித்தும் இங்கு விசேடமாக குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அரச அதிகாரிகள் தொடர்பில் விமர்சனங்கள் இருப்பின், அந்த அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து, அதுபற்றி விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த சபையில் அவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை சவாலுக்குட்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நிலையியற் கட்டளை 91(எ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அவ்வாறான அவதூறு அல்லது தவறான அறிக்கைகள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மேலும் தெரிவித்துக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
நில்வளா கங்கையை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து புதிய முன்மொழிவுத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சனைகளை ஆழமாக ஆராய்ந்து புதிய புனர்நிர்மாண முன்மொழிவுத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்காக (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி தலைமையிலான குழுவுக்கு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னால் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
இதற்கமைய, மஹிந்த அமரவீர, கஞ்சன விஜேசேகர, சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, சஷீந்திர ராஜபக்ஷ, மைத்ரீபால சிறிசேன, சமல் ராஜபக்ஷ, சீ.பீ. ரத்நாயக்க, டலஸ் அழகப்பெரும, திலிப் வெதஆரச்சி, புத்திக பத்திறண, ஹேஷா விதானகே, சம்பத் அதுகோரல, கருணாதாஸ கொடிதுவக்கு, (டாக்டர்) உபுல் கலப்பத்தி, ஷான் விஜயலால் த சில்வா, இசுரு தொடன்கொட, கிங்ஸ் நெல்சன், நிபுண ரணவக, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.