இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பாதணிய பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட மீரிகம பிரதேசத்தில் நேற்று (04) இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் பலத்த காயத்திற்குள்ளாகி தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து கல்கமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தலாவயிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த பெண் தலாவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்கமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயணித்தவர் என்பதோடு, குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதியான, கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ஜம்சித் என்பவர் பலத்த காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அநுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற அதில் பயணித்த சுவஸ்திபுர சியம்பலேவ பிரதேசத்தில் வசிக்கும் இருவரும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயத்திற்குள்ளான ஏனைய மூவரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.