Sunday, November 24, 2024
Home » காசாவில் இஸ்ரேலிய படுகொலைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம்

காசாவில் இஸ்ரேலிய படுகொலைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம்

போர் நிறுத்தப் பேச்சிலும் சிக்கல்

by mahesh
March 2, 2024 1:24 pm 0 comment

உதவி பெறுவதற்கு கூடியவர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை சிக்கலாக்கி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னர் கூறியது போல் வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது சாத்தியம் இல்லாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காசா நகரின் கடற்கரையோர வீதியான அல் ரஷீதில் உள்ள நபுல்சி சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை உணவு லொறிகளுக்காக காத்திருந்தவர்கள் மீதே இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு குறைந்தது 750 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து கூறப்படும் கூற்றை அமெரிக்கா சரிபார்த்து வருவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

உணவு உதவிக்காக முண்டியடித்த பலஸ்தீனர்கள் மீதே இஸ்ரேலியப் படை சூடு நடத்தியதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது. ‘உணவை பெறுவதற்கு முயற்சிக்கும் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படைகள் சூடு நடத்தியது நியாயப்படுத்த முடியாதது’ என்று பிரான்ஸ் முன்னதாக கண்டித்திருந்தது.

அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த இத்தாலி, இந்த துயரமிக்க மரணங்களுக்கு பின் பலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை தருவதாக கூறியிருக்கும் சீனா, இந்த கொலைகளை கடுமையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனைப் பயங்கரமானது என்று வர்ணித்திருக்கும் அவுஸ்திரேலியா இதனை நேரடியாக இஸ்ரேலிய தூதரகத்திற்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இந்த மோதலின் மோசமான உயிரிழப்பு எண்ணிக்கை திகைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். உயிரிழப்புகளைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தலைவர் ஜோசப் பொரெல், இது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டிப்பதாக குறிப்பிட்டிருக்கும் கொலம்பியா, இஸ்ரேலில் இருந்து ஆயுதங்கள் வாங்குவதையும் இடைநிறுத்தியுள்ளது. துருக்கி, கட்டார் நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புச் சபைக்கு முட்டுக்கட்டை

இந்த படுகொலை சம்பவத்தை அடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் நியூயோர்க்கில் அவசர கூட்டத்தை நடத்தியபோதும், இந்தத் தாக்குதலை கண்டிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிடுவதை வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா முடக்கியுள்ளது.

இந்த அவசர கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர், இந்த அறிக்கைக்கு 15 உறுப்பு நாடுகளில் 14 நாடுகள் ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டார்.

அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அல்ஜீரியாவால் வரையப்பட்ட இந்த அறிக்கையில், ‘ஆழ்ந்த கவலை’ வெளிப்படுத்தப்பட்டிருந்ததோடு ‘இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூடு காரணமாக’ இந்த நிலைமை ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவை வெளியிடவில்லை என்பதோடு, அறிக்கை ஒன்றை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபட் வூட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர் நிறுத்தம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை எட்ட முடியும் என்று சில நாட்களுக்கு முன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் எதிர்பார்ப்பு நீடித்து வருவதாக பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ‘பிராந்தியத்தில் இருப்பவர்களுடன் நான் தொலைபேசியில் பேசியிருந்தேன். பெரும்பாலும் திங்கட்கிழமை இருக்காது ஆனால் நான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்’ என்றார்.

பைடன் கடந்த வியாழக்கிழமை கட்டார் எமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியுடன் போர் நிறுத்த முயற்சிகள் தொடர்பில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

‘பணயக்கைதிகளை விடுவிப்பது, காசாவில் குறைந்தபட்சம் ஆறு வாரங்களுக்கு ஒரு உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் என்று தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்’ என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இவ்வாறான நீண்ட அமைதிக் காலத்தை மேலும் நீண்ட நிலைத்திருக்கும் ஒன்றாக உருவாக்க முடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றபோதும், காசாவில் பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரித்து பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகி இருக்கும் சூழலில் அண்மைக் காலத்தில் போர் நிறுத்த முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

பலஸ்தீன தரப்புகள் மொஸ்கோவில் பேச்சு

கடந்த ஒக்டோபர் 7 ஆம் இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் இஸ்ரேலியப் படை 147 ஆவது நாளாக நேற்றைய (1) தினத்திலும் காசாவில் கடும் தாக்குதல்களை நடத்தியது.

மத்திய காசாவில் உள்ள அல் புரைஜ் அகதி முகாமில் நேற்றுக் காலை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். முகாமில் இருக்கும் அல்குரைனாவி குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக உள்ளூர் மக்களை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மறுபுறம் தெற்கின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டு மேலும் 10 பேர் காயமடைந்திருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய புதிய வான் தாக்குதல்களில் பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாதங்களை தொடும் இந்தப் போரில் காசாவில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 30,000ஐ தாண்டி இருப்பதோடு 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

காசா செல்லும் உதவிகள் இஸ்ரேலால் முடக்கப்படும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு குறிப்பாக வடக்கு காசா பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பாக உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ், பத்தா உட்பட பலஸ்தீன தரப்புகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை ஒன்று ரஷ்ய அரசின் அனுசரணையில் மொஸ்கோவில் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை இன்று நிறைவடையவுள்ளது. இதில் ஹமாஸ், பத்தா தவிர இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் மேலும் சுமார் பத்து பலஸ்தீன தரப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

‘பல்வேறுபட்ட பலஸ்தீன தரப்புகள் அரசியல் ரீதியில் ஐக்கியப்படுவதற்கு உதவுவதே ரஷ்யாவின் நோக்கமாகும்’ என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்திற்கான தூதுவர் மிகைல் பொடனோவ் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் உக்கிரம் அடைந்து பலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் பதவி விலகியுள்ள சூழலிலேயே மொஸ்கோ சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காசா போருக்குப் பின்னர் பலஸ்தீனத்தில் புதிய நிர்வாகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் தரப்புகள் பேசி வருகின்றன.

கடந்த 2007 தொடக்கம் பலஸ்தீனத்தில் அரசியல் பிளவு நீடித்து வருவதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பத்தா அமைப்பும் காசாவில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி நடத்தி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளில் அரபுத் தலைநகரங்களில் சமரச பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் எதுவும் வெற்றி அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT