அமைச்சர் ஹரின் பெனாண்டோ இந்தியாவில் தெரிவித்த கூற்றை சில சமூக வலைத்தளங்கள் மிகைப்படுத்தி வெளியிட்டதாலே, பல்வேறு விமர்சனங்கள் எழுவதற்கு காரணமானதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுந்த வாத, விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
அமைச்சர் ஹரின் பெனாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்தை முழுமையாக கேட்டிருந்தால் அதன் உள்ளடக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
சமூக வலைத்தளங்கள் அமைச்சர் வெளியிட்ட கூற்றின் சில பகுதிகளை மாத்திரம் செம்மைப்படுத்தி வெளியிட்டிருக்கின்றன.இதனால், தவறான விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்தியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பை முழுமையாக கேட்டுப்பார்த்தால் அதன் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள முடியும்.
பாராளுமன்றத்தில் நேற்று விமல் வீரவன்ச எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று சபையில் கேள்வி எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி, இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியென அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்திருக்கும் விடயம் அரசாங்கத்தின் நிலைப்பாடா அல்லது, அவரது தனிப்பட்ட கருத்தா என்பதை அரசாங்கம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அங்கு இடம் பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என தெரிவித்திருந்தார். அமைச்சரின் இக்கூற்று அமைச்சரவையின் கூட்டு நிலைப்பாடா? அரசாங்கத்தின் நிலைப்பாடா? அல்லது அமைச்சரின் தனிப்பட்ட கருத்தா? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்து அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றால். தனது, நாடு தொடர்பில் அவ்வாறு தெரிவிப்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் உரிமை என்ன? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்