Sunday, November 24, 2024
Home » மனைவியை நேசிப்போம்!

மனைவியை நேசிப்போம்!

by sachintha
February 16, 2024 12:47 pm 0 comment

எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அளப்பரிய சக்தி மிகுந்தவன். அவன் நினைத்தால் எந்த ஒரு உயிரினத்தையும் படைக்கும் வல்லமை உள்ளவன். அவன் ‘ஆகுக’ என்று சொன்னால் போதும், அவன் நினைத்த உயிரினம் படைக்கப்பட்டு விடும். அத்தனை வல்லமை மிக்க அல்லாஹ் படைத்தவற்றில் மிகவும் சிறப்பு மிக்க படைப்பு தான் மனிதன்.

இது குறித்து அல் குர்ஆன், “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச்செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்”.( (4:1) என்று குறிப்பிட்டுள்ளது.​

அதேநேரம் மனிதனுக்கு வாழ்க்கை துணையாக படைக்கப்பட்ட அவனது மனைவி குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான், “நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன”. (30:21).

“உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக முன்கூட்டியே நற்கருமங்களின் பலனை அனுப்புங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மறுமையில் அவனை சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (2:223).

இறைவன் கூறிய இந்த வழியிலேயே நபி(ஸல்) அவர்களின் மண வாழ்க்கையும் அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளார்கள். எந்த நிலையிலும் அவர்கள் தங்கள் மனைவிகளில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார்கள். அவர்களுக்குரிய மரியாதையை அளித்தார்கள்.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளதாவது, “தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து சென்று விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

இதுதான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. தன்னுடைய மனைவியருடன் அன்போடும், அவர்களுடைய வேலைகளில் தானும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவி புரிபவர்களாக இருந்தார்கள். மனைவிக்கு எந்த சிரமத்தையும் கொடுக்க மாட்டார்கள். மனைவியோடு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். எந்த நிலையிலும் எந்த விதத் தவறான பேச்சையும் பேசமாட்டார்கள்.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் மனைவியரிடம் தான் ஒரு நபி என்ற மமதையோடு நடந்து கொள்ளமாட்டார்கள். நான் உங்களில் ஒரு மனிதர் என்ற எண்ணத்தில் தான் நடந்து கொள்வார்கள். தன்னுடைய மனைவிமாரோடு விளையாட்டாக சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சிரிக்க வைப்பார்கள். அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், அதிலும் குறிப்பாக மனைவிமார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மனைவியருடன் அன்பும் இரக்கமும் ஏராளமாக இருந்தது.

இது குறித்து ஆயிஷா (ரழி) அவர்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய கோபத்தையும், உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீ திருப்தியுடன் இருக்கும்போது பேசினால், ‘ஆம். முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும் போது பேசினால், ‘இல்லை. இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள். நான், “ஆம் உண்மை தான். நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் தங்கள் மீதன்று” என்று கூறினேன். (ஆதாரம்: புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் கூர்ந்து கவனித்து எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஆகவே திருக்குர்ஆன் கூறிய வழியிலும், நபிகள் வாழ்ந்து காட்டிய பாதையிலும் மனைவியையும், குடும்பத்தையும் நேசித்து வாழ்வோம்.

மின்ஸார் இப்றாஹீம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT