இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று (06) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ணத்தில் சந்தித்த தோல்வியை அடுத்து புதிய தேர்வுக் குழுவினால் புதிய அணித் தலைவரின் கீழ் இலங்கை அணி ஆடும் முதல் போட்டியாக இது அமையவுள்ளது. எனினும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க இந்த ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு பதில் ஷெவோன் டனியல் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் 28 மாதங்களின் பின் அகில தனஞ்சயவுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதோடு, சகல துறையிலும் சோபித்து வரும் ஜனித் லியனகேவும் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று புதிய ஒருநாள் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் குசல் மெண்டிஸ் மற்றும் உப தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலில் இலங்கை அணி எதிர்கொள்ளும் போட்டி என்பதால் இன்றைய ஆட்டம் முக்கியமானதாக உள்ளது. இதில் துடுப்பாட்ட வரிசையில் இன்றைய ஆட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ களமிறங்க வாய்ப்பு இருப்பதோடு மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க செயற்பட வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன மற்றும் அகில தனஞ்சய பலம் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இலங்கையில் இதுவரை 16 தடவைகள் சந்தித்திருப்பதோடு அதில் 12 முறை இலங்கையும் 4 தடவைகள் சிம்பாப்வே அணியும் வெற்றியிட்டியுள்ளன. கடைசியாக 2022 ஜனவரியில் இரு அணிகளும் சந்தித்தபோது 2–1 என ஒருநாள் தொடரை இலங்கை அணியால் வெல்ல முடிந்தது. எவ்வாறாயினும் ஒருநாள் தரவரிசையில் 88 புள்ளிகளுடன் தற்போது 7 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரை தோற்றால் 8 ஆவது இடத்திற்கு தள்ளப்படும். தரவரிசையில் 87 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் 7 ஆவது இடத்திற்கு முன்னேறிவிடும்.
பல மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணிக்கு சிம்பாப்வேயுடனான இந்த ஒருநாள் தொடர் எதிர்கால செயற்பாடுகளுக்கு தீர்க்கமானதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ள இலங்கை அணி: குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, மஹீஷ் தீக்ஷன, அகில தனஞ்சய, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, துனித் வெள்ளாலகே அல்லது ஜனித் லியனகே.