முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி – கட்டம் – III இன் செயற்பாடுகள் கிண்ணியா கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக கல்வி அடைவில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்ற கிண்ணியா கல்வி வலயத்தில் கல்வி மற்றும் கல்வி அடைவுகளைப் பாதிக்கின்ற பல்வேறு தேவைகள் உடைய 13 பாடசாலைகளில் மேற்படி தொனிப்பொருளில் மூன்றாம் கட்டமாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதலாவது கட்டத்தில் 5 பாடசாலைகளும் இரண்டாவது கட்டத்தில் 13 பாடசாலைகளும் இத்தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பயன்பெற்றன.
போதைப்பொருள் பாவனை, இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர் பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்குகள் , பாடசாலை அதிபர்களுக்கான ஆற்றல் மேம்படுத்தல் பயிற்சிப் பட்டறைகள், ஆசிரியர்களுக்கான ஆற்றல் மேம்படுத்தல் பயிற்சி பட்டறைகள் , பிள்ளைகளுக்கான ஆற்றல் மேம்படுத்தல் பயிற்சிப் பட்டறைகள், மாணவர்களுக்கான மேலதிகநேர வகுப்புக்கள் என பல வடிவங்களில் முஸ்லிம் எய்ட் நிறுவனம் தனது பணிகளை நிறைவேற்றி வருகின்றது. அரசாங்கத்தின் கல்விக் கொள்கைளை அடியொற்றி நிலைபேறான அபிவிருத்தி இலக்கு – 4 (Sustainable Development Goal- 4) இனை பிரதிபலிக்குமுகமாக முஸ்லிம் எய்ட் சிறிலங்கா 13 பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில், கட்டுமாணம் சார்ந்த மற்றும் கற்றல், கற்பித்தல், ஊக்கப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகள் அடையாளம் காணப்பட்டு வள ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன கல்விச்சூழலில் மாணவர்கள் உட்பட கல்விச் சமூகம் எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக் கூடியதாக இக்கருத்திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கிண்ணியா வலயக்கல்வி அலுவலகம் போன்றன உத்தியோகபூர்வ ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.
இர்ஷாத் இமாமுதீன் (கிண்ணியா தினகரன் நிருபர்)