தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பேசியிருக்கிறார்.
“நான் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க” என்று பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான தேவைகள் குறித்தும் விளக்கினார்.
திருச்சி விமான நிலையத்தின் 2 ஆவது முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிகரம் தொட்ட மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசு நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெல் ஒப்பந்தப் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.