ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமையை வகித்த போது உலகளாவிய தெற்கின் கவலைகளை இந்தியா வெற்றிகரமாகச் சர்வதேசமயப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற நிலையியற் குழு தெரிவித்துள்ளது.
பி.பி. சௌத்திரி தலைமையிலான இக்குழு ‘ஜி20 அமைப்பு நாடுகளுடன் இந்தியாவின் ஈடுபாடு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள 27ஆவது அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் அதற்கான குரல் இந்தியாவினால் முதலில் முன்வைக்கப்பட்டது. இதில் 125 நாடுகள் பங்குபற்றின. இதன் ஊடாக பல்தரப்பு வாதத்தில் புதிய உதயம் உருவானது.
இம்மாநாட்டின் போது இடம்பெற்ற சர்வதேச உரையாடல்களில் உலகளாவிய தெற்கின் கவலைகளை இந்தியா வெற்றிகரமான முறையில் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு சென்றமையை இக்குழு தம் அறிக்கையில் மிகுந்த திருப்தியோடு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் புவிசார் அரசியலினால் மேற்கு கிழக்குக்கு இடையிலும், அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு இடையிலும் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஜி20 நாடுகள் அமைப்பின் மாநட்டில் வெளியிடப்பட்டுள்ள புதுடில்லி தலைவர்கள் பிரகடனம் ஒரு பாலமாக அமைய இந்தியா வழிவகுத்தது.
சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் உலகளாவிய வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு உலகளாவிய தெற்கு நாடுகளில் இருந்தே வரும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருப்பதையும் இவ்வறிக்கையில் இக்குழு தெரிவித்துள்ளது. உலகளாவிய முன்னேற்றத்தின் பெரும்பகுதியை இயக்குவதற்கு இப்பிராந்தியம் தொழிலளர்களையும் முதலீட்டு வாய்ப்புக்களையும் வழங்கும்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 அமைப்பு நாடுகளது தலைவர்கள் உச்சி மாநாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்குபற்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.