Sunday, November 24, 2024
Home » கொழும்பு, காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

கொழும்பு, காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

- சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் பல்வேறு விடயங்கள் அம்பலம்

by Rizwan Segu Mohideen
December 23, 2023 3:28 pm 0 comment

– மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி ரூ. 1 கோடி 20 இலட்சம்

கொழும்பு, காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதோடு, பல்வேறு விடயங்கள் அம்பலமாகியிருந்தன.

கொழும்பு கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி, விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தலபத்பிட்டிய, நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களில் இருந்து அகற்றப்பட்ட 8 பதிவு இலக்கத் தகடுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​காலி, கலஹே பிரதேசத்தில் சந்தேகநபருக்குச் சொந்தமான வீடொன்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அகற்றப்பட்ட 6 பதிவு இலக்கத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பான தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, ​​மேல் மாகாணத்தில் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, வெலிக்கட, மஹரகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்களும், காலி பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 19 எனவும், அந்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி சுமார் ஒரூ கோடி 20 இலட்சம் ரூபாவாக (ரூ. 12,000,000) இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றையதினம் (22) பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டதுடன், கொழும்பு தெற்குப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெரஞ்சன் அபயகுணவர்தன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT