குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு தனது கணவனை கொன்றதற்காக ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமிரா ஷப்சியான் என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை (20) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ஷப்சியான் பல ஆண்டுகளாக குழந்தை திருமணம், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மரண தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கிறார் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
திருமணம் முடிக்கும்போது 15 வயதான ஷப்சியான் நான்கு ஆண்டுகள் கழித்து கணவனை கொன்றதற்காக 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட கணவரின் பெற்றோர் அவருக்கு மன்னிப்பு அளிக்க மறுத்த நிலையிலேயே தூக்கிலிடப்பட்டுள்ளார்.
அவருக்கு இரு குழந்தைகள் இருப்பதோடு, கைது செய்யப்பட்டது தொடக்கம் குழந்தைகளை பார்க்காத நிலையில் கடைசியாக இந்த மாத ஆரம்பத்திலேயே அவர் குழந்தைகளை பார்த்துள்ளார்.