பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், பணச்சலுவை உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இந்தியாவும் ஒமானும் கைச்சாத்திட்டுள்ளன.
ஒமான் நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த இராஜதந்திர விஜயத்தின் போது இப் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஒமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக், இந்தியாவின் உப ஜனாதிபதி ஜக்தீப் தங்கரை சந்தித்து கலந்துரையாடியதோடு பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இரு பக்க உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.
‘இந்திய – ஒமான் கூட்டு நோக்கு மற்றும் எதிர்கால கூட்டாண்மையின் கீழ் கடல் சார் ஒத்துழைப்பு, வலுசக்தி பாதுகாப்பு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட எட்டு முதல் பத்து வெவ்வேறு பகுதிகளில் செயற்படுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா, இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரிவான அடிப்படையிலும் ஆக்கப்பூர்வமான முறையிலும் அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் நிதிப் புலனாய்வுப் பிரிவும் ஒமானின் நிதித் தகவல்களுக்கான தேசிய மத்திய நிலையமும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், பணச்சலுவை உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்ஸிலும் ஒமான் நாட்டின் தோபர் பல்கலைக்கழகமும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் ஹிந்தி மொழி கற்கைக்கான நிலையத்தை அமைப்பதற்கும் இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுடப அமைச்சும் ஒமான் நாட்டின் போக்குவரத்து தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும் தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாட்டுத் தலைவருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.