– டிசம்பர் 26 இல் செயலி வெளியிட எதிர்பார்ப்பு
– DMC, TRC, Mobitel, Hutch, Dialog, Airtel புரிந்துணர்வு ஒப்பந்தம்
அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் SLT Mobitel, Hutch, Dialog, Airtel உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து முழுமையான அனர்த்த முன்னெச்சரிக்கை பொறிமுறையொன்றை வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ். ரணசிங்க, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டீ.எம்.எம். திசாநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டதோடு, இதன்போது பிரதான தொலைபேசி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன் பங்குதாரர்களான, டயலொக் ஆசியாட்டா குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபுன் வீரசிங்க, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜானக ஆர். அபேசிங்க, பாரதீ எயர்டெல் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசீஸ் குப்தா, மொபிடெல் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுதர்ஷன கீகனகே, ஹவிசன் டெலிகொமினிகேஷன் தனியார் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சுமித்ரா குப்தா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி கைத்தொலைபேசிகளுக்கான செயலியை தேசிய பாதுகாப்பு தினமான 2024 டிசம்பர் 26 ஆம் திகதி வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மற்றும் காலநிலை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய காரணிகளால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் உரிய முன் எச்சரிக்கையுடன் செயற்படும்பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களைக் குறைக்க முடியும். அதற்கமைய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைபேசி சேவைகள் வாயிலாக முழுமையான முன் எச்சரிக்கைகளை வழங்க முடியும்.
அதற்கமைய சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைக்குள் நாட்டின் 14 மாவட்டங்களில் சுனாமி அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க கூடியவர்கள் என அறியப்பட்ட சுமார் 60,000 பேருக்கு “Ring Tone” முறையிலான ஒலியுடன் கூடிய முன் எச்சரிக்கை செய்தியொன்றை அனுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக இரவு வேளைகளில் சயிரன் ஒலியுடன் கூடிய முன் எச்சரிக்கை பொறிமுறையொன்று உருவாக்கப்படும்.
மேற்படித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு பாதிப்புக்கள் தொடர்பிலான முன் எச்சரிக்கைகளையும் இதனூடாக வழங்குவதால் முழுமையான முன் எச்சரிக்கை பொறிமுறையொன்றை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.