– தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்தியா
இந்தியா – தென்ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி T20 கிரிக்கெட் போட்டி நேற்று (14) நடைபெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்ஆபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை குவித்தது. ஜெய்ஸ்வால் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 100 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து 202 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆபிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன் மூலம் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
T20 கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் வீரராக வளர்ந்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி T20 போட்டியில் 55 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக, T20 கிரிக்கெட்டில் 4ஆவது சதத்தை விளாசினார். இதன் மூலம் T20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்துள்ளார்.
சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 4 சதங்களை விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது சூர்யகுமார் யாதவ் 4ஆவது சதத்தை விளாசி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா மண்ணிலும் சதம் விளாசி இருக்கிறார்.
இந்த நிலையில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டது. சர்வதேச T20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ள 14ஆவது ஆட்ட நாயகன் விருதாகும். இதுவரை 60 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இதன் மூலமாக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.