சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான குற்றங்களை விசாரிக்க தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் மதங்கள் தொடர்பான வெறுக்கத்தக்க கருத்துகளை பரப்பும் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு தனிப் பிரிவை நிறுவுமாறு, பொலிஸ் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொதுமக்கள் பின்வரும் வழிக்ள் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.
- தொலைபேசி: 0112 300 637
- தொலைநகல் : 0112 381 045
- மின்னஞ்சல் முகவரி : ccid.religious@police.gov.lk