இந்தியாவும் ஆபிரிக்க நாடான கென்யாவும் முக்கியத்துவம் மிக்க ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
கென்ய ஜனாதிபதி வில்லியம் சமோய் ருடோ இவ்வாரம் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்த இராஜதந்திர விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
அத்தோடு மூலோபாய ஒத்துழைப்புக்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்புறவை பல்வேறு துறைகளிலும் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இச்சமயம் கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தம்மு ரவி தெரிவித்துள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் செய்த கென்ய ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் திறந்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது கல்வித் துறையில் ஒரு கூட்டு முயற்சியை ஊக்குவிக்கக்கூடியது. இந்த ஒப்பந்தங்கள் கலாசார, விளையாட்டு, டிஜிட்டல் பரிமாற்ற முயற்சிகளை உள்ளடக்கிய பன்முக பரிமாற்றத்திற்கான களத்தை அமைக்கக்கூடியன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கென்யாவின் விவசாயத் துறையை நவீனப்படுத்துவதற்கான கடன் வசதியை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து மேலும் அதிகரிக்கவும் கென்யாவின் விண்வெளி முகவரகத்தைச் சேர்ந்த 20 விஞ்ஞானிகளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (இஸ்ரோ) பயிற்சி அளிக்கவும் கென்யாவுக்கான தகவல் போர்டலை உருவாக்கவும் இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் விவசாய நிலங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள கென்யா உலகளாவிய சூரிய சக்தி கூட்டணியில் இணையவும் முன்வந்துள்ளது.