காசாவில் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு முன் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் வெடித்த பின் மூன்றாவது முறையாக மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே பிளிங்கன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கும் அவர், தெற்கு காசாவில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தால் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதித்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் கடந்த ஒன்றரை மாதமாக இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் 15,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இதில் 6,000க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர். பாரிய உயிரிழப்புகள் மற்றும் காசா பகுதியில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் காசாவில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல்களை நடத்திய நிலையில் குறைந்தது 7,000 பேர் தொடர்ந்தும் காணாமல்போயுள்ளனர்.