போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையில் அவரை CID அதிகாரிகள் கைது செய்துள்ளததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (29) நாடு திரும்பிய அவர், நேற்றையதினம் (30) CID யில் 8 மணி நேர வாக்குமூலம் வழங்கிய நிலையில், இன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, இன்று (01) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது சொற்பொழிவுக் கூட்டங்களில் பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைனய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த போது, போதகர் ஜெரோம் பெனாண்டோ சில மாதங்களுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் (29) வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ, 48 மணிநேரத்திற்குள் CID யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டுமென, நீதிமன்றத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முதல் நாளாக முன்னிலையாகி 8 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெனாண்டோ இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரம் ஒரு தடவை ஒன்லைன்மூலம் வர்த்தக ஆலோசனை மற்றும் தேவ ஆசீர்வாதம் வழங்கி அந்த சொற்பொழிவின் மூலம் மாத்திரம் ரூ. 1.5 மில்லியனுக்கு அதிகமாக பணம் சம்பாதித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக CID யினர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.