எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதியமைச்சில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த, நெருக்கடிக்கு முன்னிருந்த பொருளாதார நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவது அவசியம்.
அதற்கான அடிப்படை கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை இதுவரை எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் தரவுகளை அவதானிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, வரவு செலவுத் திட்ட ஆவணத்தை முன்வைக்கக்கூடிய சூழ்நிலையேனும் நாட்டில் இருக்கவில்லை. அந்த நேரத்தில், மிகப் பெரிய பொருளாதார சரிவுடன் அரசியல் – சமூக உறுதியற்றத் தன்மையும் நாட்டில் காணப்பட்டது.
ஆனால் இதுவரை எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் பிரதிபலன் என்று கூற வேண்டும். மேலும், அடுத்த ஆண்டு 1.8% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் அதை 2% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நாட்டின் கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, கடன் நிலைத்தன்மையை எவ்வளவு தூரம் அடைகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனவே, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது கடன் மறுசீரமைப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இந்த பொருளாதார நெருக்கடியின் போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் குழுக்களுக்கு நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
அரச ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அரச சேவைக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதன்படி, மேலதிகமாக 10,000 ரூபா வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது. மேலும், குறைந்த வருமானம் பெறுவோர், சிறுநீரக நோயாளிகள், அங்கவீனருக்கான கொடுப்பனவு, முதியோர் உதவித்தொகை பெறும் குழுக்கள் என அனைத்துப் பிரிவினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 03 மில்லியன் குடும்பங்கள் பயனடையவுள்ளன.
மேலும், பொருளாதார நெருக்கடியால், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மேம்பாட்டுக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒற்றை இலக்க மதிப்பில் சலுகை வட்டியில் கடன் வசதிகளைப் பெறுவதற்கான முறைமையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று, தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள் தவிர, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.” என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது இருந்த நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் இருந்த நாட்டை இன்று ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர ஜனாதிபதியால் முடிந்துள்ளது. கடந்த முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அதற்கான அடித்தளத்தை உருவாக்கியது. அதன் விரிவாக்கமாக 2024 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் சில அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். சேவைக் கட்டணம் அதிகம் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஜனாதிபதியின் இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால் சிறந்ததொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளது.” என்று ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ. எம். ஜி. குமாரதுங்க,
”உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் மூன்று பிரதான நிறுவனங்களாகும். இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இலங்கையில் அரசாங்க வருமானத்தை சேகரிக்கும் மூன்று பிரதான நிறுவனங்களும் அரச வருமானம் 310,100 கோடி (3,101 பில்லியன்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு இலக்கை அடைய முடிந்தால், 3,000 பில்லியன் ரூபாவைத் (3 டிரில்லியன் ரூபாய்) தாண்டிய முதல் சந்தர்ப்பமாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.
கடந்த 17 ஆம் திகதி ஆகும்போது, இந்த வருடத்தின் இதுவரை கால அரசாங்கத்தின் வருமானம் 239,400 கோடி ரூபாவை (2,394 பில்லியன் ரூபா) எட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் 141,500 கோடி ரூபாவும் (1,415 பில்லியன்) இலங்கை சுங்கத்தால் 83,200 கோடி ரூபாவும் (832 பில்லியன்) ஈட்டப்பட்டுள்ளன. மதுவரித் திணைக்களம் ஈட்டிய வருமானம் 14,700 கோடி ரூபா (147 பில்லியன்).
எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் இந்த மூன்று அரச நிறுவனங்களினூடாக 3,101 பில்லியன் ரூபா வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் 36,900 கோடி ரூபா (369 பில்லியன்) வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 15,400 கோடி ரூபா (154 பில்லியன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்தும், 13,600 கோடி ரூபா (136 பில்லியன்) இலங்கை சுங்கத்திலிருந்தும் கிடைக்கும். மீதமுள்ள ரூ.3,300 கோடி (33 பில்லியன்) மதுவரித் துறையிடம் இருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள், மொத்த அரச வருமானம் 2,71,900 கோடி ரூபா (2,719 பில்லியன்) எதிர்பார்க்கலாம், ஆனால் 2023 என்ற மதிப்பிடப்பட்ட இலக்கை நோக்கி நகர முடிந்தால், இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அரச வருமானமாக இருக்கும்.
அத்துடன் அரச வருமானத்தை மேலும் அதிகரிக்க ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி இலங்கை சுங்கத்தின் நாளாந்த வருமானம் 500 கோடி ரூபாவை எட்டியுள்ளது. 300,000 கோடி (3 டிரில்லியன்) வருமான இலக்கை எட்ட முடிந்தால், அது முதன்மைக் கணக்கு மேலதிகத்தை உருவாக்கும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.” டபிள்யூ. எம். ஜி. குமாரதுங்க என்று தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிஷ்சந்திர, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன, லக் வனிதா பெரமுனவின் தலைவி சாந்தினி கோங்கஹகே உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.