Sunday, November 24, 2024
Home » ஒக்டோபர் 27 ‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் புகைப்படக் கண்காட்சி

ஒக்டோபர் 27 ‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் புகைப்படக் கண்காட்சி

- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு

by Rizwan Segu Mohideen
October 28, 2023 7:55 pm 0 comment

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று (27) இடம்பெற்ற இந்நிகழ்வில் சிந்தனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், காஷ்மீரின் நலன்விரும்பிகள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களைச் சித்தரிக்கும் ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களும் பங்கேற்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகளும் பார்வையாளர்களுக்காக வாசிக்கப்பட்டன.

கருத்தரங்கில் அரசியல் செயற்பாட்டாளரும் முஸ்லிம் விவகார தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷிராஸ் யூனுஸ் உரையாற்றினார்.

1947 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில் அப்பாவி காஷ்மீரிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த இந்திய அட்டூழியங்களையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினர்.

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி, சட்டவிரோதமான முறையில் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியா ஆக்கிரமித்தது. அப்போதிலிருந்து, இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரானது உலகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அமர்வுகள் குறித்து பேசிய பேச்சாளர், இந்திய அட்டூழியங்களுக்கு சர்வதேச சமூகம் இனி ஒருபோதும் அமைதியாக இருக்காது என்றும் குறிப்பிட்டனர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபரூக் பர்கி கருத்துத் தெரிவிக்கையில், பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல தசாப்தங்களாக இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நியாயமான போராட்டத்திற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு மரியாதை செலுத்தியதோடு காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவினை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிய உயர் ஸ்தானிகர், பாகிஸ்தானும் அதன் மக்களும் நமது காஷ்மீரி சகோதர சகோதரிகளுடன் தங்கள் இதயங்களிலும் மனதிலும் ஒன்றுபட்டுள்ளனர்.

காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளின் படியும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு ஏற்பவும் காஷ்மீர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம். காஷ்மீரிகளுக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் ஆகியவை வழங்கப்படும் வரை காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் எப்போதும் துணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT