இந்தியாவின், மும்பையில் 2023 ஒக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறவுள்ள உலக கடல்சார் இந்திய மாநாட்டுக்கான அறிமுக நிகழ்வொன்று 2023 செப்டம்பர் 22 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகரலாயத்தால் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சின் செயலாளர் ரி,கே.இராமச்சந்திரன், வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சு ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்தியாவிலிருந்து மெய்நிகர் மார்க்கமூடாக இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அத்துடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை சிரேஸ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு வரவேற்புரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், கடல்சார் துறைகளில் இந்தியா இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியிருந்தார். அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இரு தலைவர்களாலும் வெளியிடப்பட்டிருந்த கொள்கை ஆவணத்தில் குறிப்பிட்டதனைபோலவே கடல் மார்க்கமான தொடர்பினை மேம்படுத்துவது குறித்து இரு அரசாங்கங்களும் செயற்பட்டு வருவதாகவும் உயர் ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார். அத்துடன் 2023 ஒக்டோபரில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் பங்கேற்பதனை உறுதிப்படுத்தியமைக்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சருக்கு உயர் ஸ்தானிகர் தனது நன்றியினைத் தெரிவித்திருந்தார். மேலும், இம்மாநாட்டின் பங்காளி நாடு என்ற அந்தஸ்தினை இலங்கை பெற்றிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதேவேளை, குறித்த உலக கடல்சார் இந்திய மாநாடானது உலக மற்றும் பிராந்திய பங்குடைமையினை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் ஊடாக இந்திய பொருளாதாராத்தினை மேம்படுத்துவதனை இலக்காகக்கொண்ட ஒரு பெருமுயற்சியென துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சின் செயலாளர் இங்கு குறிப்பிட்டார். உலகளாவிய கடல்சார் துறை விற்பன்னர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், முக்கிய விமர்சகர்கள், மற்றும் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்கும் உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்ற நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் குறித்த தரப்பினரை ஒன்றிணைத்து இந்தியாவில் நடைபெறும் இம்மூன்று நாள் மாநாட்டில் கெளரவ துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்பை அவர் வரவேற்றார். இலங்கை அரசாங்கத்தின் கடல்சார் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த நிகழ்வு வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், இதன் மூலமாக வர்த்தக சமூகத்தினரிடையிலான தொடர்புகள் அதிகரிப்பதற்கான வாய்புகளும் உருவாகும்.
இதேவேளை உலக கடல்சார் இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்தமைக்காக இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர், கடல்சார் துறைகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, அறிவினைப் பகிர்தல், மற்றும் புதிய தொழில் நுட்பங்களை அமுலாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை வலியுறித்தியிருந்தார். அத்துடன் இலங்கையின் துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீட்டினை பாராட்டிய அமைச்சர் , திருகோணமலையில் கைத்தொழில் வலயத்தினை அபிவிருத்தி செய்வதற்காக இரு அரசாங்கங்களும் கொண்டிருக்கும் ஆர்வத்தினையும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் யாழ்ப்பாணம் சென்னை இடையிலான விமானத் தொடர்புகளை ஆரம்பிப்பதில் இந்தியாவின் ஆதரவினை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்த அவர், இரு நாடுகளிடையிலுமான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த கொழும்பு துறைமுகத்தின் தெற்கு ஆசியா கேற்வே டேர்மினல்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொமேஸ் டேவிட் இப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியில் வினையூக்கியாக செயற்படுவதில் கடல்சார் துறைகளில் இந்திய இலங்கை ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை சுட்டிக்காட்டியிருந்தார். இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளனம், இலங்கை வர்த்தக சம்மேளனம், இந்திய இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை கப்பல்துறை முகவர்கள் சங்கம், கொள்கலன் போக்குவரத்து முகவர் சங்கம், ஶ்ரீலங்கா லொஜிஸ்டிக் ஆன்ட் பிரைட் போவர்டேர்ஸ் அசோசியேஷன், ஸ்ரீலங்கா ஹப் ஒபரேட்டர்ஸ் அசோசியேஷன், ஸ்ரீலங்கா லொஜிஸ்டிக்ஸ் ப்ரவைடேர்ஸ் அசோசியேஷன், ஸ்ரீலங்கா ஷிப்பேர்ஸ் கவுன்சில், சர்வதேச வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.