19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சு நகரில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை 15 நாட்கள் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 வீர, வீராங்கனைகள் 483 பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பமாகின்றபோதும் மகளிர் கிரிக்கெட், படகோட்டப் போட்டி மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் ஆரம்பச் சுற்று ஆட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கை 20 போட்டி நிகழ்ச்சிகளுக்காக 96 வீர, வீராங்கனைகள் (62 ஆடவர் மற்றும் 34 மகளிர்) பங்கேற்கவுள்ளனர். ரக்பி தவிர்த்து மற்ற அனைத்து விளையாட்டுகளும் இலங்கை கொடியின் கீழ் நடைபெறவுள்ளதோடு கிரிக்கெட், தடகளம், மல்யுத்தம் மற்றும் பாரம் தூக்கல் போட்டிகளில் இலங்கை பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆடவர் எழுவர் ரக்பி அணி ஆசிய ஒலிம்பிக் குழு கொடியின் கீழ் பங்கேற்கவுள்ளது. உலக ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு தடை விதித்திருப்பதன் காரணமாகவே ரக்பி அணியால் இலங்கை கொடியின் கீழ் பங்கேற்க முடியாதுள்ளது.
2002 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனுர ரொஹான் மற்றும் தடகள வீராங்கனை கயந்திக்கா அபேரத்ன ஆரம்ப நிகழ்வில் இலங்கை கொடியை சுமந்து செல்லவுள்ளனர். 52 வயதான ரொஹான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கொடியை சுமந்து செல்லும் மிக வயதானவராக பதிவாகவுள்ளார்.
எனினும் பதக்க எதிர்பார்ப்புக் கொண்ட இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காதது பெரும் இழப்பாக உள்ளது. ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்ற 400 மீற்றர் அஞ்சலோட்ட அணி இந்தப் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
சாமரி அத்தப்பட்டு தலைமையிலான மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை நெருங்கி இருக்கும் நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணி சுழல்பந்து சகலதுறை வீரர் சஹன் ஆரச்சிகே தலைமையில் களமிறங்கவுள்ளது.
முதல் முறையாக ஈ-விளையாட்டுகள் பதக்கப் பிரிவில் இடம்பெற்றிருப்பதோடு இலங்கை பப்ஜி கைபேசி விளையாட்டில் பங்கேற்கவுள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இளம் மல்யுத்த வீராங்கனையான நெத்மி அஹின்சா இலங்கைக்கு பதக்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்புடைய மற்றொரு வீராங்கனையாக உள்ளார். பாரம் தூக்கல் வீரர் டிலங்க இசுரு குமார கடந்த ஆண்டு பெர்மிங்ஹாமில் பதக்கம் வென்ற நிலையில் சீனாவில் இருந்து பதக்கம் கொண்டுவர வாய்ப்பு உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அது ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறும். ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ரக்பி போட்டிகள் செப்டெம்பர் 24 தொடக்கம் 26 வரை நடைபெறும்.
நீச்சல் வீரர்களான மத்தியு அபேசிங், அகலங்க பீரிஸ் மற்றும் கங்க செனவிரத்ன செப்டெம்பர் 24 தொடக்கம் 28 வரை போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
மல்யுத்தம் மற்றும் பாரம் தூக்குதல் போட்டிகளில் இலங்கை வரும் ஒக்டோபர் 1 தொடக்கம் 5 ஆம் திகதி வரை போட்டிகளில் பங்கேற்கும்.