– இலங்கையின் வெளி விவகாரக் கொள்கை வரைபை சமர்ப்பிக்க அலி சப்ரியிடம் கோரிக்கை
தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய, அதிக நிதி செலவிடும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மும்மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்ற தேசிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை வரைவை சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடனன், இலங்கைக்கான நீண்டகால பாதுகாப்புக் கொள்கையின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு செயற்படும் எனவும், தேசிய கொள்கை கட்டமைப்பை ஏனைய அமைச்சுக்களும் பின்பற்றும் எனவும் ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் கொள்கை கட்டமைப்புக்குள் பாரிய இடைவெளி காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்திற்கு தேசிய கொள்கையின்மை குறிப்பிடத்தக்க பின்னடைவாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தினால் தேசியக் கொள்கை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வும் நிகழலக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.