தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் அவரால் நிறுத்தப்பட்ட கை ரிக்ஷா குறித்த சிறப்புக் கண்காட்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகம் வளர்கலைக் கூடத்தில் அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் கருணாநிதி தடை செய்த கை ரிக்ஷா குறித்த சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கருணாநிதியின் நூற்றாண்டை அருங்காட்சியகத்துறை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கருணாநிதிக்கு அவர் முதல்வராக பதவி வகித்த கால கட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் தொகுக்கப்பட்டு அருங்காட்சியக வளர்கலைக் கூடத்தில் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பருமனான ஒரு மனிதனை ஒடிசலான தேகமுடைய மற்றொரு மனிதன் கை ரிக்ஷாவில் ஏற்றி இழுத்துச் செல்லும் அவலத்தினை கண்ட கருணாநிதி அதனை ஒழித்திட சட்டம் நிறைவேற்றினார். அவ்வாறு ஒழிக்கப்பட்ட ஒரு கை ரிக்ஷா இன்று அந்த பழைய வரலாற்றினையும் கருணாநிதியின் மனித நேயத்தினையும் நினைவுப்படுத்தும் விதமாக இங்கு பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “அரசு அருங்காட்சியகத் துறை சார்பில் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சி எழும்பூர் அருங்காட்சியகத்தில் ெதாடங்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதி அவர்களின் அரசியல் வாழ்க்கைப் பயணம், திரையுலக வாழ்க்கை, பத்திரிகையாளர் வாழ்க்கை என பன்முகத் தன்மை கொண்ட வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் நூற்றாண்டு விழா அனுசரிக்கப்படுகிறது. இக்கண்காட்சி அரசு அருங்காட்சியகத் துறை சார்பில் இளைஞர் சமுதாயம் முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் என்னென்ன திட்டங்களை முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
“இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள கைரிக்ஷா இந்திய தேசத்தில் இன்னும் சில மாநிலங்களில் உள்ளது. மனிதனே மனிதனை அமர வைத்து கைகளால் இழித்து செல்லும் கை ரிக்ஷாவை ஒழிக்க வேண்டும் என முதலமைச்சராக இருந்த கருணாநிதி திட்டம் கொண்டு வந்த பிறகுதான் ஓட்டோ ரிக்ஷாக்கள் நடைமுறைக்கு வந்தன. இக்கண்காட்சியில் இதனை அரிய காட்சியாக அமைத்து இளைஞர் சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.