Channel 4 வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பில்லை என, கிராமிய பாதைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடை நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமெனும் எண்ணத்துடன் தாங்கள் இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
Channel 4 வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்றும், அது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர இடம்பெற்ற சதித் திட்டம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த காணொளியில், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இருந்து வெளியேறிச் சென்ற அவ்வமைப்பின் முன்னாள் பேச்சாளர் ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.
ஆயினும் குறித்த நபர் புகலிடக் கோரிக்கைகளுக்காக இவ்வாறான விடயங்களை மேற்கொண்டுள்ளதாக, சபையில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டிருந்தார்.