மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் தொடர்பான நான்கு குற்றங்களை செய்துள்ளமையை ஐ.சி.சியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டி10 தொடரின் போது விதிமுறையை மீறி பரிசுப்பொருட்களை பெற்றமை, பணத்தை பெற்றுக்கொண்ட விடயத்தை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் அறிவிக்காமை மற்றும் இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமை போன்ற நான்கு குற்றச்சாட்டுகள் கடந்த 2021ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. சாமுவேல்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் அவருக்கான தண்டனை தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்த சாமுவேல்ஸ் 71 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.