தொழிலாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விரிவான நலத்திட்டங்களுக்கென, பல அமைச்சுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றை இணைத்து விரிவான பலதரப்பு செயலணி அமைக்கப்படுவதன் அவசியத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
தொழில் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை கேந்திரமாக்கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் அமைச்சர் கேட்டுள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் நேற்று (17) நடைபெற்றது.இதன்போதே இந்த விடயத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
இப்பேச்சுவார்த்தையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதான தொழினுட்ப ஆலோசகரும் பிராந்திய செயல் பாட்டு சேவை பிரிவின் பிரதானி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட விசேட நிபுணர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, சமூக பாதுகாப்பு திணைக்களம், சமூக ஊக்குவிப்பு, சேமநல அமைச்சு மற்றும் முக்கிய முதலாளிமார் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து. இந்த செயலணி அமைக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்தோடு இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ILO அமைப்பு பார்வையாளராகச் செயல்பட்டு, இவ்விடயங்களில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொழில் வாய்ப்பின்றி இருப்போருக்கு காப்புறுதி முறை,மகப்பேறு நலன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, விரிவான தொழிலாளர் சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.