Sunday, November 24, 2024
Home » தமிழரின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்

தமிழரின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்

-13ஆவது தொடர்பில் ஈ.பி.டி.பி கையளித்துள்ள பரிந்துரையில் சுட்டிக்காட்டு

by sachintha
August 18, 2023 5:56 am 0 comment

 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக (16) ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது.

தொல்லியல் ஆய்வு செயற்பாடுகள் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்றுத்துறை நிபுணர்களின் பங்குபற்றுதல் மற்றும் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.மாறாக தொல்லியல் திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத் தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் விருப்பு, வெறுப்பு சார்ந்த முன்னெடுப்புக்களாக அமைவதை அனுமதிக்க கூடாது எனவும் ஈ,பி,டி,யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறாளை முருகன் ஆலயம், கீரிமலை தீர்த்தக் குளம் மற்றும் பருத்தித்துறை இறங்கு துறை போன்ற பகுதிகள் தொல்லியல் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தி அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் குறித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

துறைசார் நிபுணர்கள், சம்மந்தப்பட்ட பிரதேச தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் யாருடைய கருத்துக்களும் உள்வாங்கப்படாமல் கொழும்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள பறாளை முருகன் ஆலயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் தவறானவை என்பதை வரலாற்றுத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் சிலவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மாறாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முன்னெடுக்கப்படும் எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT