இலங்கை தெற்காசியப் பிராந்தியத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடாகும். இந்நாடு முன்னெடுத்துவரும் இலசவ சுகாதார சேவை இதற்கு பாரிய பங்களிப்பு நல்கியுள்ளது. இச்சேவையின் நிமித்தம் வருடா வருடம் கோடிக்கணக்கான ரூபா நிதி செலவிடப்படுகிறது.
அதேநேரம் இச்சேவையைச் சிறந்த முறையில் தரம்மிக்க வகையில் முன்னெடுக்கவென விசாலமான உட்கட்டமைப்பு வசதியையும் விஷேட மருத்துவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பாரிய சுகாதாரத்துறை ஆளணியினரையும் இந்நாடு கொண்டிருக்கின்றது.
இலவச சுகாதார சேவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதன் பயனாக இந்நாட்டில் பல நோய்கள் கட்டுப்பாட்டு நிலையிலும் சில நோய்கள் ஒழிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன. அவற்றில் போலியோ, யானைக்கால் நோய், சின்னமுத்து, மலேரியா போன்ற நோய்களை ஒழித்துக்கட்டிய நாடு என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார ஸ்தாபனம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நாட்டினரின் உயிர்வாழ்வதற்கான எதிர்பார்க்கப்படும் வாழ்வுக்காலம் கடந்த 75 வருட காலப்பகுதியில் சுமார் 25 வருடங்கள் அதிகரித்துள்ளன. இவை மாத்திரமல்லாமல் இன்னும் பல முன்னேற்றங்களையும் இலவச சுகாதாரத்துறை இந்நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது.
இலவச சுகாதார துறையின் ஊடாக பாரிய முன்னேற்றங்களையும் அடைவுகளையும் நாடு பெற்றுக்கொள்வதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஆளணியினரின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
இதேவேளை இந்நாடு முன்னெடுத்துவரும் இலவசக் கல்வி கொள்கை, அதிகம் எழுத்தறிவுள்ளவர்களை உருவாக்கவும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட கற்றறிந்தவர்களையும் துறைசார் புலமையாளர்களையும் உருவாக்கிடவும் பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றது.
இந்நாட்டின் இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையும் இந்நாட்டு மக்களிடம் அறவிடப்படும் வரி வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றின் ஊடாக இந்நாட்டின் எல்லா மக்களும் பயனடைகின்றனர். அவர்களில் இந்நாட்டு மருத்துவர்களும் அடங்குவர்.
கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடு கடும் பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்தது, அந்நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று முன்னேற்றப்பாதையில் பயணிக்கவென முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் பயனாக தற்போது நாடு மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளும் அசௌகரியங்களும் பெரிதும் நீங்கியுள்ளன. ஆன போதிலும் இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களில் இருந்து நாடு முழுமையாக மீட்சி பெறுவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்கவே செய்கின்றனர்.
என்றாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள சில வேலைத்திட்டங்கள் என்பவற்றின் பின்புலத்தில் சில மருத்துவர்கள் நாட்டை விட்டு செல்கின்றனர். இது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஆனால் நாட்டின் தற்போதைய சூழலில் மருத்துவர்களும் விஷேட மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு செல்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது.
நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியினால் மருத்துவர்கள் மாத்திரமல்லாமல் நாட்டின் எல்லா மட்டத்தினருமே பாதிப்புகளுக்கும் தாக்கங்களுக்கும் முகம்கொடுத்தனர். நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி மக்கள் பொறுமை காக்கும் போது மருத்துவர்கள் நாட்டு செல்வது உசிதமானதல்ல. நாட்டின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டியவர்களில் மருத்துவர்களும் அடங்குவர்.
இருப்பினும் ‘இவற்றில் கவனம் செலுத்தாது மருத்துவர்கள் நாட்டை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்’ என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் மருத்துவர்களின் இச்செயற்பாட்டின் விளைவாக இந்நாட்டின் சுகாதார சேவை நிச்சயம் நெருக்கடியை எதிர்கொள்ளவே செய்யும். அந்நெருக்கடி இலவச சுகாதார சேவையைக் கூட பாதிக்கக்கூடியதாக அமைந்து விடலாம்.
ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு மருத்துவர்கள் முன்பாக உள்ளது. தவறும் பட்சத்தில் இலவச சுகாதார சேவை வீழ்ச்சி அடையவும் அதன் தரம் பாதிக்கப்படவும் வழிவகுத்தவர்கள் என மருத்துவர்கள் அடையாளப்படுத்தப்படக்கூடிய நிலையும் கூட ஏற்பட்டிடலாம். அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி மருத்துவர்கள் செயற்படுவது இன்றியமையாததாகும்.