உட்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தி மேம்படுத்துவதையும் கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவும் காலப்பகுதியில் வாகனப் போக்குவரத்து வசதிகளை முன்னேற்றுவதையும் இலக்காகக் கொண்டு 3117 கோடி ரூபா செலவில் சுரங்கப்பாதைகளை அமைக்கும் திட்டம் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக பயணிகளுக்கு பாதுகாப்பானதும் சிறந்ததுமான போக்குவரத்து சேவையை வழங்கவும் பயண நேரத்தை குறைக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று காஷ்மீர் மாநில நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் காசிகுண்ட் – பனிஹில் இடையில் 8.45 கிலோ மீற்றர்கள் நீளமான சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள அதேநேரம், ஸ்ரீநகர்-சோனாமார்க் நெடுஞ்சாலையில் 6.50 கி.மீ நீளமான சுரங்கப்பாதையின் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அக்நூர் – பூஞ்ச் இடையிலான நான்கு வழி சுரங்கப் பாதை, சிங்போரா – வைலூ இடையில் முக்கிய இணைப்பை வழங்கும் சிந்தன் பாஸின் 10.30 கி.மீ. சுரங்கப்பாதை, சுத்மஹாதேவ் – டிரங்கா பிரதேசங்களுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்தும் எட்டு கி.மீ. சுரங்கப்பாதை மொராக் – டிக்டோல் வரையிலான 4.38 கி.மீ. நீளமான இரட்டைக்குழாய் சுரங்கப்பாதை, கூனி நல்லாவில் உள்ள 3.2 கி.மீ. சுரங்கப்பாதை, ஜம்மு ரிங் நெடுஞ்சாலையில் 2.15 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை, கில்டானி – பைபாஸில் 1.574 கி.மீ. சுரங்கப்பாதை ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த சுரங்கப்பாதைகளை அமைப்பதன் ஊடாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பிரதேச மட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.