– 30% வரி செலுத்தி விடுவித்துக் கொள்ள முடியும்
பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு அவசியமான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், இறக்குமதி தடை காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுங்க அனுமதி வழங்கப்படாத வாகனங்களை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்ததன் பின்னர் துறைமுகம் வரையான (CIF) பெறுமதியில் 30% வரியை செலுத்தி விடுவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடனன் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள், லொறிகள் மற்றும் விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு நேற்று நள்ளிரவு (14) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படு லொறிகள், தீயணைப்பு வாகனங்கள் போன்ற விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இதன் கீழ் அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம், பயணிகள் போக்குவரத்து வசதிகள் வலுப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் அது வழிவகுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Gazette_No_2345-03