ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், சர்வதேச விவகாரங்கள் முன்னொரு போதும் இல்லாத வகையில் சிக்கலானதாக மாறியுள்ள போதிலும், எமது மக்களை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை எமது சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளால் வழிநடத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவின் தலைமையில் நடைபெறவிருக்கும் நிலையில் ராஜ்ய சபாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி ஜெய்சங்கர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது வௌியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாக மாத்திரமல்லாமல் அதற்கு உலகில் உரிய இடம் மீண்டும் கிடைக்கப்பெறுவதற்கும் ஜி20 தலைமை வழிவகுத்துள்ளது. இத்தலைமையை ஏற்றதன் ஊடாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து கவனம் செலுத்த முடிந்துள்ளதோடு காலநிலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் மனிதன் மைய அணுகுமுறையை நாம் பரிந்துரை செய்துள்ளோம்.
குறிப்பாக காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறையை வலுப்படுத்தல், உணவுப் பாதுகாப்பு குறித்த சவாலை எதிர்கொள்ள தினைகளை பிரபல்யப்படுத்துதல் என்பனவும் அப்பரிந்துரைகளில் அடங்கியுள்ளன. அத்தோடு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் நாங்கள் ஆதரித்துள்ளோம்.
இந்தியா இன்று தனக்காக மட்டுமல்லாமல் பலருக்காவும் பேசக்கூடிய நாடு என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. நாம் அனைவரதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்திற்கான குரலாக இருக்கிறோம். அதேநேரம் எமது தேசிய நலன்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாத்துள்ளோம்’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.