கெக்கிராவ பகுதியில் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தொகைக்கடையில் 25 இலட்சம் ரூபாய் பணமும், 30 இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க விற்பனை பொருட்களும் திருடப்பட்டுள்ளன. நேற்று (26) அதிகாலை 1 மணி அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கியில் வைப்பிளிடுவதற்காக வைத்திருந்த பணத்தொகையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
கடை உரிமையாளர் தொழில் நிமித்தம் மியன்மார் நாட்டிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் முகமூடி அணிந்த திருடன் ஒருவனால் இத்திருட்டு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடையின் CCTV யினை பரிசோதனை செய்த கெக்கிராவ பொலிஸார் கடையில் பணி புரிபவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டு திருடனை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கெக்கிராவ மற்றும் மரதங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளில் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாகவும், மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் மரதங்கடவல பகுதியில் இதே போன்றதொரு விவசாயத்துக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதும் குறித்த திருட்டின் குற்றவாளி இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெக்கிராவ குறூப் நிருபர் – ஐ. எம். மிதுன் கான்