சூடான் இராணுவம் தலைநகர் கார்டூமில் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பார்த்தவர்கள் மற்றும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நைல் நதிக்கரையில் தலைநகர் கார்ட்டூமுக்கு எதிரே உள்ள ஓம்டுர்மானின் டார் எஸ் சலாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (08) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தலைநகரை கைப்பற்றுவதற்கு இராணுவம் மற்றும் பலம்மிக்க துணைப் படை ஒன்று கடந்த ஏப்ரல் தொடக்கம் சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் எதிர்காலம் பற்றி இராணுவத் தளபதி மற்றும் துணைப்படை தலைவர் இடையே ஏற்பட்ட மோதலே அங்கு தற்போது போராக வெடித்துள்ளது.
அந்த வான் தாக்குதலில் வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக துணைப் படை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பன்னிரண்டு வாரங்களாக நீடிக்கும் மோதலால் தலைநகரின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு கடைகள் மற்றும் சந்தைகள் அரிதாகவே திறக்கப்படுவதோடு கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த மோதல் தலைநகரைத் தாண்டி இன வன்முறை நீடிக்கும் மேற்கு டார்புர் பிராந்தியம் உட்பட பல இடங்களுக்கு பரவியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் கிழக்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பின் மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சு இன்று (10) எத்தியோப்பியாவில் நடைபெறவுள்ளது.