நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் 128 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஹராரேயில் நேற்று (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.
சஹன் ஆரச்சிகே நிதானமாக ஆடி 71 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவினார். ஆரச்சிகே ஆடிய இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இதுவாகும். குசல் மெண்டிஸ் 52 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நெதர்லாந்து விக்கெட்டுகளை இலங்கை பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் அந்த அணி 23.3 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கே சுருண்டது.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
இதன்படி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டியது. இதன்மூலம் இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்ட நெதர்லாந்து அணியும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.