பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷித மானசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி காலியில் அரம்பமாகவுள்ளது. இதில் இணைக்கப்பட்டிருக்கும் 23 வயதான மானசிங்க 2022 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டபோதும் கன்னி டெஸ்ட்டில் வாய்ப்புப் பெறத் தவறினார். இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 24ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மானசிங்க கடந்த மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். பல்லேகல மற்றும் பி சரா ஓவலில் நடைபெற்ற அந்தத் தொடரின் இரு போட்டிகளிலும் அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போதைய மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் கடைசியாக ஆடிய முதல்தர போட்டியில் நீர்கொழும்பு அணிக்கு எதிராக எஸ்.எஸ்.சி அணி சார்பில் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் எஸ்.எஸ்.சி அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மானசிங்கவின் வருகையால் 29 வயதான லெக் ஸ்பின் சுழல் வீரர் துஷான் ஹேமன்தவுக்கு இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹேமன்த அண்மையில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இலங்கை குழாத்தில் இடம்பெற்றபோதும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன்போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய நீக்கப்பட்டு அவருக்கு பதில் பிரவீன் ஜயவிக்ரம 15 பேர் கொண்ட குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய சுழற்பந்து வீச்சில் அணியை வழிநடத்தவுள்ளனர்.
இந்தக் குழாத்தில் அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித்த ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும் அசித்த டெங்கு காய்ச்சலில் இருந்து அண்மையிலேயே மீண்டு வந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆடவுள்ளார். அவருக்கு பதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருப்பதாக தேர்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
22 வயதான மதுஷங்க டெஸ்ட் போட்டிகளில் சோபித்து வரும் நிலையில் லஹிரு குமார மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதேபோன்று அயர்லாந்து தொடரில் இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த மிலான் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் தமது இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இதனால் பதும் நிசங்க அணியில் இடம்பெறாத நிலையில் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப வீரராக நிஷான் மதுஷ்க செயற்படவுள்ளார். நியூசிலாந்து தொடரில் முதல் முறை இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த மதுஷ்க அயர்லாந்துக்கு எதிரான தனது மூன்றாவது சர்வதேச போட்டியிலேயே இரட்டை சதம் (205) பெற்றார். சதீர சமரவிக்ரமவும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இலங்கை குழாம்: திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க (வி.கா.), சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லக்ஷித மானசிங்க, பிரவீன் ஜயவிக்ரம, அசித்த பெர்னாண்டோ/ டில்ஷான் மதுஷங்க, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த.