சவூதி அரேபிய தூதரகத்தின் அனுசரணையுடனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்துள்ள தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டி எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கின்றது.
இப்போட்டியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகளின் மாணவ மாணவிகள் பங்குபற்றுவார்கள். இப் போட்டியில் முதல் ஐந்து இடங்களையும் பெறும் மாணவ மாணவிகள் சவூதி அரேபிய அரசாங்கம் பெருமதி மிக்க பரிசுத்தொகைகளை வழங்க உள்ளது.
சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவில் வருடா வருடம் நடைபெறும் அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை உட்பட பல உலக நாடுகளிலிருந்தும் மாணவர்களை அங்கு வரவழைத்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர வேறு சில தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் சவூதி அரேபியா தேசிய ரீதியிலும் போட்டிகளை நடத்தி வருகின்றது.
அந்த வகையில், இம்முறை முதல் முறையாக இலங்கை அந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டமைக்காக சவூதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர். உலகில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சவூதி அரேபியா முன்னணியில் இருப்பது போன்று ஏனைய கலைகளையும் ஊக்குவிப்பதற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
அந்த வகையில், முஸ்லிம்களின் வேதமாகிய அல்-குர்ஆனை அச்சிட்டு உலக முஸ்லிம்களுக்கு வழங்குவது மாத்திரமல்லாமல், அந்த அல்-குர்ஆனை மனனமிடுபவர்களை ஊக்குவிப்பதற்காகவும். அல்குர்ஆன் மனனப் போட்டிகளை சவூதி அரேபிய அரசாங்கம் பல வருடங்களாக நடாத்தி வருகின்றது. இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.