வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை நகர எல்லையிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் , ஹோட்டல்கள் மற்றும் மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (10) காலை அநுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியை முற்றாக மறித்து பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மிஹிந்தலை நகர மக்கள், சுற்றுவட்டார கிராமிய மக்கள் மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைகழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரையிலிருந்து பத்து கிலோ மீற்றர்களுக்குள் போதைப்பொருள் விற்பனை நிலையங்களோ, இறைச்சிக் கடையோ இருக்கக் கூடாது என்ற வர்த்தமானி அறிவித்தல் இருந்தும், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாகக் கூறி மதுபான விற்பனை நிலையம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாங்கள் அனைவரும் போராட்டம் நடத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அங்கு விஜயம் செய்த மிஹிந்தலை பிரதேச செயலாளர் திரு.அனுராதநாயக்க பண்டார, தான் இவ்விடயம் தொடர்பில் மத்தியஸ்தம் செய்து மாவட்ட சுற்றுலா அமைச்சு மற்றும் கலால் திணைக்கள பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததற்கு இணங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
-திறப்பனை தினகரன் நிருபர் – ஏ.ஆர்.எம்.ரபியுதீன்