– ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில்; ஒருவரின் சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையில்
பொலன்னறுவை, கதுருவெலவிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மன்னம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கொட்டலி பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், மேலும் ஒருவரின் சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பஸ் மிக நீண்ட காலமாக இவ்வாறு மிக வேகமாக பயணித்து வந்ததாகவும், சாரதியின் அசமந்த போக்கே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
July 09, 2023 – 10.40pm
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
மன்னம்பிட்டி பஸ் நிலையத்திலிருந்து இன்று (09) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கல்முனை நோக்கி பணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டலி எனும் பாலத்தின் ஊடாக பயணிக்கும் போது அதிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 இற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குட்பட்டதாகவும், தகவல்கள் வெளிவருகின்றன.
உயிரிழந்தவர்களின் உடல்களும், பாதிக்கப்பட்டவர்ளும், பொலன்நறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்னதாகவும், அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசாரும், பொதுமக்களும், பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் – வ. சக்திவேல்)