ஈழத்து முன்னணி எழுத்தாளரும், ஆய்வாளரும், நூல் வெளியீட்டாளரும், தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான மாத்தளை சோமு மொரீசியஸ், ரியூனியன், சீசெல்ஸ், மலேசியா, தமிழகம் ஆகிய நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொள்கின்றார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி மொரீசியஸ் நாட்டுக்கு விஜயம் செய்யும் மாத்தளை சோமு மொரீசியஸ் மகாத்மாகாந்தி நிலையத்தில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்கிறார். மொரீசியஸ் கல்வியாளர் ஸ்டீபன் நாராயணப்பிள்ளை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளி மக்கள் மாசபையின் மொரீசியஸ் பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார். அதனையடுத்து ரியூனியன், சீசெல்ஸ் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கலைஇலக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடுகின்றார். இம்மாதம் 28 ஆம் திகதி மலேசிய நகரான ஈப்போவில் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் பிரதம அதிதியாக பங்கு பெறும் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்’ நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாத்தளை சோமு படைப்புகள் குறித்த பல்வேறு தலைப்புகளிலான ஒரு நாள் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு ஏற்புரை வழங்குவார். இக்கருத்தரங்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வை. இராமராஜ பாண்டியன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் உ. அலிபாபா, மதுரை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளார்கள். தமிழகம் மற்றும் இலங்கை, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்தரங்கில் மாத்தளை சோமு எழுதிய புலம்பெயர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள் அடங்கிய ‘ஒற்றைத்தோடு’ என்ற சிறுகதை தொகுப்பு, கருத்தரங்கு கட்டுரைகள் அடங்கிய நூல் என்பனவும் வெளியிடப்படவுள்ளன.
இதுவரை அவர் எழுதிய சிறுகதைகளில் தெரிவுசெய்யப்பட்ட 100 சிறுகதைகள் கொண்ட இரண்டு தொகுதிகள் பேராசான் மு.நித்தியானந்தன் முன்னுரையோடு விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எச். எச். விக்கிரமசிங்க