கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயக்கும் பேத்தாழை பொதுநூலகம் மற்றும் விபுலானந்தர் வாசகர் வட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பேத்தாழை பொதுநூலகத்தின் முன்பகுதியில் இருந்து பாசிக்குடா கடற்கரை வரையான பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் நெகிழிப் பொருட்கள் (பிளாஸ்டிக் பொருட்கள்) மற்றும் உக்காத குப்பைகளைச் சேகரிக்கும் சிரமதான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் சுற்றுலாத் தளமாக பாசிக்குடா கடற்கரை விளங்குகின்றது. இக்கடற்கரைக்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள பேத்தாழை பொதுநூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்டத்தினர் பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருவது மாத்திரமன்றி, பல சமூகநல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அந்தவகையில் பேத்தாழை விபுலானந்தர் வாசகர் வட்டத்தினர் ஏனைய வாசகர் வட்டங்களுக்கு முன்னுதாரணமாக நூலகம் தொடக்கம் பாசிக்குடா கடற்கரை வரையான வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
நேற்றுக்காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இச்சிரமதான நிகழ்வில் பேத்தாழை பொதுநூலக உத்தியோகத்தர்களுடன் வாசகர் வட்டத்தில் அங்கம் வகிக்கும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ம. பிரகாஷ் நூலகப் பொறுப்பாளர் பேத்தாழை பொதுநூலகம்