உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில்
நாளை (07) நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான கடைசி சுப்பர் சிக்ஸ் பேட்டியில்
மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து இரு முன்னணி வீரர்கள் திரும்ப
அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து
முன்னணி சகலதுறை வீரரான ஜேசன் ஹோல்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்
இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த இரு வீரர்களும் நேற்று (05) நடைபெற்ற ஓமான் அணிக்கு எதிரான
போட்டியிலும் அணியில் ஆடவில்லை.
எதிர்வரும் இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்காக அவர்களை
தயார்படுத்தும் வகையிலேயே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் இந்த முடிவை
எடுத்துள்ளது.
“ஜேசன் மற்றும் அல்சாரி இருவரும் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னணி
பந்துவீச்சாளர்களாக உள்ளனர்” என்று மேற்கிந்திய தீவுகள் தேர்வுக் குழு தலைவர்
டெஸ்மன் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உபாதையால் சுழற்பந்து வீச்சாளர் யனிக்
கரியா விலகிய நிலையில் தற்போது இரு வீரர்கள் வெளியேறியுள்ளதால் மேற்கிந்திய தீவுகள்
குழாத்தில் 13 வீரர்களே எஞ்சியுள்ளனர். மாற்று வீரர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.