காஷ்மீர் தயாரிப்புக்கள் ஊடாக எமது வளமான கலாசாரத்தின் அனுபவங்களை எல்லா மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று ஜம்மு காஷ்மீரின் இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பழைய மாணவியும் காஷ்மீர் தெற்கின் இளம் தொழில்முயற்சியாளருமான நிம்ரா சரூர் தெரிவித்துள்ளார்.
இளம் தொழில்முயற்சியாளரான நிம்ரா சரூர் தமது உற்பத்திகளை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தவென இன்ஸ்டகிராமில் பக்கமொன்றையும் ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் ஏ.என்.ஐ க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எமது தயாரிப்புகளுக்கு காஷ்மீரில் மாத்திரமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் சாதகமான பிரதிபலிப்புக்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இதனையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம். அதனால் எமது தனித்துவமான தயாரிப்புக்களை நாட்டின் ஏனைய மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் விளம்பரப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரின் வளமான கலாசாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படும் நிர்மா சரூர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிடைக்கப்பெறும் பொருட்களைப் பயன்படுத்தி காஷ்மீர் சால்வைகள், குர்திகள், உலர் பழங்கள், குங்குமப்பூ உற்பத்திகள் உள்ளிட்ட பதினொரு தயாரிப்புக்களை மேற்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.