Friday, March 29, 2024
Home » India vs Afghanistan 2nd T20: ஆப்கானிஸ்தானை சிதைத்த ஜெய்ஸ்வால் – துபே கூட்டணி

India vs Afghanistan 2nd T20: ஆப்கானிஸ்தானை சிதைத்த ஜெய்ஸ்வால் – துபே கூட்டணி

- 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய அணி

by Prashahini
January 14, 2024 10:36 pm 0 comment

3 T20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் தனது கணக்கு திறக்காமல் வெளியேறினார். ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஓட்டங்கள் 5 ஆக இருந்தது.

அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக ஆட தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியை தொடர, வெறும் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ஓட்டங்களை எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 33 ஓட்டங்களும் கோலி 13 பந்துகளில் 25 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் அசராமல் அசுர அடி அடித்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துபேயும் சிறப்பாக பேட்டிங் செய்து 13 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுக்க, இந்தியா9.3 ஓவர்களில் 100ஐ தாண்டியது. தொடர்ந்து இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வான வேடிக்கையாக தெறிக்கவிட்டு கொண்டு இருந்தனர்.

உள்ளே வந்ததும் முதல்T 20 போட்டியில் காட்டிய அதிரடியை சிவம் துபே, இந்த 2வது T20 போட்டிகளிலும் தொடர்ந்தார். அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை உடைத்தார். சிவம் துபே 21 பந்துகளில் அரைசதம் அடிக்க, இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் 2 பந்துகளை சந்தித்து ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

36 பந்துகளில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் உள்ளே வந்ததுடன் பவுண்டரியை ஓடவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள ஓட்டங்களை , 26 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் துபே 63 ரன்களுடனும், ரிங்கு சிங் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்களும், நவீன் உல் ஹக் மற்றும் பரூக்கி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT