டிஜிட்டல் யுகத்தில் தினகரன்

இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் 84 வருடங்களைக் கண்டிருக்கும் தேசிய பத்திரிகையான தினகரன் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு வந்துள்ளது. வாசகர்களின் தேவையை நிவர்த்திசெய்யக் கூடிய வகையில் அந்தந்த காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தினகரன் தவறியிருக்கவில்லை.

ஆரம்பகாலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட அச்சுக் கோப்பு முறையில் (லித்தோ பிரின்ட்) அச்சிடப்பட்ட தினகரன் பத்திரிகை படிப்படியாக நவீனத்துக்குள் நுழைத்தது. டிஜிட்டல் அச்சுமுறையுடன் மாத்திரம் நின்றுவிடாது ‘சிட்டிசன் ஜேர்னலிஸம்’ பக்கத்தை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது. அச்சுப் பிரதிக்கான வாசகர்களை மாத்திரமன்றி நவீன தொழில்நுட்ப உலகத்தில் டிஜிட்டல் வாசகர்களின் தேவைகளையும் பூர்த்திசெய்து வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பக்கவடிவமைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதுடன், நவீன அச்சு இயந்திரங்களால் அச்சிடப்படும் தினகரன், டிஜிட்டல் முறையிலும் வாசர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது. ‘ஸ்மார்ட்’ உலகத்தில் வாசகர்கள் இருக்கும் இடங்களிலிருந்தே தினகரனைப் பார்ப்பதற்கான நவீன வசதிகளும் காணப்படுகின்றன. www.thinakaran.lk என்ற இணையத்தள முகவரியின் ஊடாக தினகரன் பத்திரிகையை ‘ஈபேப்பர்’ முறையில் சகல பக்கங்களையும் பார்வையிடமுடியும். அது மாத்திரமன்றி பழைய பிரதிகளை தேவையான திகதியின் அடிப்படையிலும் இணையத்தின் ஊடாகப் பார்வையிட முடியும்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்த நவீன உலகத்தில் தினகரனின் சமூக வலைத்தளத்திலும் கால்தடம் பதிக்கத் தவறவில்லை. முகநூல், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் தினகரன் செய்திகள் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்திகள் ஊடாக உடன்செய்திகள் சேவையும் முன்னெடுக்கப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபாட்கள் மூலம் உள்ளங்கைகளிலேயே தினகரனைப் பார்வையிடமுடியும்.

இதற்கு மேலதிகமாக ஸ்மார்ட் போன்களில் தினகரன் செய்திகளை உடனக்குடன் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘தினகரன் அப்லிகேஷன்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய ஊடகம் என்ற பரிணாமத்திலிருந்து ‘நவீன ஊடகம்’ என்ற வளர்ச்சிப்பாதையில் தினகரன் தொடர்ந்தும் வீறுகொண்டு நடைபோட்டு வருகிறது. கடந்த 84 வருட காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தினகரன் நவீன பாதையில் பயணித்து வாசகர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்து வருகிறது.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...