மருத்துவத் துறையில் நிகழும் அருவருப்புகள்!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சையென்பதன் பேரில் கொழும்பில் உள்ள நான்கு தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெற்று வந்த முறைகேடான சம்பவங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இலங்கையில் உள்ள சில பிரபலமான தனியார் மருத்துவமனைகள் பணம் ஈட்டும் நோக்கத்துக்காக எத்தகைய முறைகேடான செயலிலும் துணிந்து இறங்குவதற்குத் தயாராக உள்ளனவென்ற உண்மை மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி தருகிறது. அதேசமயம் எமது நாட்டின் வைத்திய நிபுணர்களில் சிலர் இலாப நோக்கம் கருதி, மனிதாபிமானத்தையே முற்றாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டு மோசடி வியாபாரிகள் போன்று செயற்படுவது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மக்களிடையே சிறுநீரக வியாதிகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. சிறுநீரக வியாதிகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காத காரணத்தினாலும், கிருமித்தொற்று, உணவு மூலமான நச்சுப் பதார்த்தங்களாலும் சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்து வருகிறது.

சிறுநீரகங்கள் முற்றாகச் செயலிழந்தால் மருத்துவ சிகிச்சையினால் அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது. சிறுநீரகங்கள் பழுதடைந்து கொண்டு செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியுமாக இருந்தால், சிறுசீரக செயலிழப்பைத் தடுத்து நிறுத்த மருத்துவத்தில் வழிகள் உள்ளன. சிறுநீரகங்கள் முற்றாக செயலிழந்து போனால், சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

இவ்வாறானதொரு இறுதிக் கட்டத்தில் நோயாளி ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தகைய விலையையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பார். கையில் பணமில்லாத நிலையில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கென வீடு, காணி உட்பட எந்தவொரு உடைமையையும் விற்பதற்குத் தயங்காதவராகவே நோயாளி இருப்பார். நோயாளியின் இவ்வாறான பலவீனமான நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கென்று தனியார் வைத்தியசாலைகள் தயாராகவே இருக்கின்றன. வைத்திய நிபுணர்களும் ஈவுஇரக்கமின்றி பெருந்தொகைப் பணத்தைக் கறக்கத் தயங்குவதில்லை.

சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை வைத்து பணம் உழைப்பதற்கென ஏராளமான கும்பல்கள் இயங்கி வருகின்றன. சிறுநீரகத்தைத் தானம் செய்வோரைக் கண்டுபிடித்து அவர்களை உரியவரிடம் சேர்ப்பித்து தரகுப் பணம் பெறுவதற்கென கும்பல்கள் இயங்குகின்றன. இக்கும்பல்களின் வலைப்பின்னல் இந்தியா வரை வியாபித்திருப்பதாக இப்போது அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது.

சிறுநீரக நோயாளி ஒருவர் தனது உறவினர் ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாகப் பெறுவதில் இந்தியாவைப் பொறுத்த வரை தடைகள் கிடையாது. உறவினர் அல்லாத வேறொருவரிடமிருந்து சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதானால் அரசிடமிருந்து அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இவ்வாறான அங்கீகாரம் பெறுவதற்கு பல படிகளைத் தாண்ட வேண்டும். நீண்ட நாள் தாமதங்கள் அந்நடைமுறையில் உள்ளன. அதுவரை நோயாளி பொறுத்திருக்க வேண்டும். சிகிச்சை முடியும் வரையான செலவினங்களும் மிக அதிகம்.

இவ்வாறான பின்னடைவுகளை வாய்ப்பாக வைத்து பணம் ஈட்ட ஆய்த்தமானது ஒரு கும்பல்... இலங்கையைச் சேர்ந்தோரும் இந்தியாவைச் சேர்ந்தோரும் உள்ளடங்கிய அக்கும்பல் இரகசியமான முறையில் தமது வியாபாரத்தை நடத்தத் தொடங்கியது.

இந்தியாவில் சிறுநீரக நோயாளிகளையும் சிறுநீரகம் தானம் செய்வோரையும் இனங் கண்டு சிறுநீரகத்துக்கான விலையை நிர்ணயிப்பது முதல் கட்டப் பணி. அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது அடுத்த கட்டம்.

நோயாளி ஒருவர் தனது உறவினர் அல்லாதவரிடம் சிறுநீரகத்தை தானமாகப் பெற்று மாற்றுச் சிகிச்சை பெறுவதில் இந்தியாவைப் போன்று இலங்கையில் சட்டவிதிமுறையெல்லாம் கிடையாது. பணம் கையில் இருக்குமானால் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு இலங்கையில் தனியார் வைத்தியசாலைகள் தாராளமாகவே இருக்கின்றன. இந்தியாவில் தாமதமடைகின்ற அல்லது சாத்தியமாகாத காரியத்தை இலங்கையில் வைத்து இலகுவாக நிறைவேற்றும் வியாபாரம் நீண்ட காலமாகவே நடந்து வந்திருக்கிறது. இம்முறைகேடு சமீப காலமாகத் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மற்றொரு நாட்டில் சட்டத்துக்கு முரணாக விளங்குகின்ற காரியத்தை எமது நாட்டில் மேற்கொண்டு வந்தமை ஏற்புடையதான செயலல்ல. தனியார் வைத்தியசாலைகள் வருமான நோக்கம் கருதி இவ்வாறான செயலில் ஈடுபட்டமை முறையானதல்ல. அதேசமயம் பல்கலைக்கழகம் சென்று பெரும் பட்டம் பெற்ற வைத்திய நிபுணர்கள் வரம்புகளையெல்லாம் மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டமைக்குக் காரணம் பணம் ஈட்டுவதற்காக மட்டுமே ஆகும். கற்றவர்களாகவும், சமூகத்தில் உயர் அந்தஸ்து உள்ளோராகவும் கருதப்படுவோர் பணத்துக்காக இவ்வாறெல்லாம் நடந்துகொள்வது அருவருக்கத்தக்க செயலாகும்.

இதுவிடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இம்முறைகேட்டை விசாரணை செய்யவென அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்திய தரப்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலவச வைத்தியத்தில் இலங்கைக்கு நிகராக வேறெந்த நாட்டையும் பாராட்டிக் கூற முடியாது. அதேசமயம் தனியார் வைத்தியசாலைகள் தமது போக்கில் மனம் போனபடி தான்தோன்றித்தனமான முறையில் செல்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் இடமளித்துள்ளன என்பது உண்மை. இதுவே இலவச மருத்துவத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் இவ்விடயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம். இல்லையேல் மருத்துவம் என்பது முழுமையாக வியாபாரமாகி விடலாம்.


Add new comment

Or log in with...