அ'சேனை; விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோணாவத்தை பெரிய பாலத்தில் நேற்று (16) பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த வீதி விபத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
 
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனை 07 அல்-அர்ஹம் பாடசாலை வீதியைச் சேர்ந்த அலியார் லெப்பை மீராசாகீப் என பொலிஸார் தெரிவித்தனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீராசாகீப் என்பவர் துவிச்சக்கரவண்டியில்  அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் இருந்து பிரதான வீதிக்கு கோணாவத்தை பெரிய பாலத்தினுடாக செல்லும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
 
இதன்போது தலையில் படுகாயமடைந்த  குறித்த நபர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
 
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சலீம் முஹம்மட் சியாம் (16), மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்த செயினுலாப்தீன் முஹம்மட் அம்ஜத் (16) ஆகிய இரு இளைஞர்களும் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி திருமதி எஸ்.ஏ.ஆர். ஆக்கீலா, சந்தேகநபரான இளைஞரை இன்று (17) காலை வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று, எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன்  பிரேத பரிசோதனையின் பின் உயிரிழந்தவரின் ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
 
(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)

Add new comment

Or log in with...